வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்குச் செல்லும் வீதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று இரவு சென்ற பொலிசாரை கண்ட சந்தேக நபர் தனது கையிலிருந்து பொதியை தூக்கி எறிந்துவிட்டு ஓடித்தப்பியுள்ளார்.இதையடுத்து பொதியை பார்வையிட்ட பொலிசாருக்கு பேரதிச்சியளித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று இரவு 7.30மணியளவில் புதூர் நாகதம்பிரான் ஆலய வீதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இடம்பெறுவதாக புளியங்குளம் பொலிசாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து பொலிசார் அப்பகுதிக்கு சிவில் உடையில் நான்கு பேர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதையடுத்து அவ்வீதியில் சென்ற இனந்தெரியாத நபர் ஒருவர் தனது கையில் வைத்திருந்த மர்மப் பொதியை தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளார்.
பொலிசார் அவரைத்துரத்திச் சென்றபோதும் அவர் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் குறித்த பொதியை பொலிசார் பார்வையிட்டபோது அதனுள் கைத்துப்பாக்கி அதற்குரிய ரவைகள், கைக்குண்டுகள் நான்கு, ஸ்மாட் கைத்தொலைபேசிகள் 2 அதற்குரிய மின்கலத்துடனான மின் வழங்கி என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொலிசார் புளியங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்நிலையில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உதவிப் பொலிஸ்மா அதிபருக்கு தகவல் வழங்கியதுடன் இராணுவத்தினர், விஷேட அதிரடிப்படையினர் , மோப்ப நாய்களுடன் வரவழைக்கப்பட்டு இரவு எட்டு மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்றதுடன் அப்பகுதி பொலிசாரின் பூரண கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் தேடுதல் நடவடிக்கையும் முடக்கிவிடப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபர் ஒருவரைத் தேடி வலைவிரித்துள்ளனர்.
எனினும் இன்று மதியம் 12மணியரையும் பொலிசார் மற்றும் இராணுவத்தினரின் நடவடிக்கை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் சந்தேக நபர் எவரும் இன்று மாலை வரையில் கைது செய்யப்படவில்லை.
ஸ்மாட் கைத்தொலைபேசியின் விபரத்தினை வைத்துக்கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது தொலைபேசி சிம் அட்டைக்குரிய நபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாகவும் எனினும் குறித்த சந்தேக நபர் 35வயது தொடக்கம் 40வயதிற்குட்பட்டவர் என்றும் அவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்று பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளதுடன் குறித்த நபர் கைத்துப்பாக்கியை இயக்கி தாக்குதல் மேற்கொள்வதற்கு தயார் நிலையில் காணப்பட்டுள்ளதாகவும் பொலிசாரை அல்லது இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் குறித்த நபர் வந்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நடவடிக்கைக்கு வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேயவிக்கிரம தலைமையில் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.எம்.தென்னக்கோன், புளியங்குளம் பிரிவு உதவி பொலிஸ் அதிகாரி பொன்சேகா ஆகியோரின் கண்காணிப்பில் புளியங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கீழ் பொலிஸ் உத்தியோகத்தர்களான பண்டார, ரத்நாயக்க, ஜெயலத், ரமேஷ், அத்தநாயக்க, ஹேரத், சேனாரத்ன ஆகியோர் ஈடுபட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுபுன் விதானகே தெரிவித்துள்ளார்.