இவரு பெரிய ஆளா வருவாரு பாருங்க’ என்று இயக்குநர் பாரதிராஜாவிடம் பாக்யராஜ் குறித்து அப்போதே கமல் தெரிவித்தார்.
இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பாக்யராஜ் பேசியதாவது:
” 16 வயதினிலே படம் பண்ணும் போது எங்க டைரக்டர் சார் (பாரதிராஜா) கதையைக் கொடுத்து படிக்கச் சொன்னார். ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. என்னய்யா, எப்படி இருக்குன்னு கேட்டார். நல்லாருக்கு சார்னு சொன்னேன்.
அப்புறமா, மெதுவா… ‘சார், சப்பாணின்னு கேரக்டர் வைச்சிருக்கீங்க. அதனால அந்தக் கேரக்டர் பேசுறதுல மாடுலேஷன் மாத்தினா நல்லாருக்கும்’னு சொன்னேன். பேசிக்காட்டுன்னு சொன்னார். ‘ம…யி…லு..’ன்னு கொஞ்சம் ராகம் போட்டு பேசிக் காட்டினேன். டைரக்டர் சாருக்கு பிடிச்சுப் போச்சு.
அப்புறம் கமல் சார் நடிக்க வந்தப்போ, இதை அவர்கிட்ட சொன்னப்ப, பேசிக்காட்டுங்கன்னு சொன்னார். பேசினேன். இன்னும் ரெண்டு சீன் பேசுங்கன்னு சொன்னார். ரெண்டு மூணு சீன் பேசிக்காட்டினேன். ‘டேக் போலாம்’னு சொன்னார் கமல் சார். அப்புறம், பிரமாதம் பண்ணினார்னுதான் எல்லாருக்கும் தெரியுமே!
படத்துல முக்கியமான சீன்… ‘சந்தைக்குப் போவணும், ஆத்தா வையும், காசு கொடு’. ரஜினிகிட்ட கமல் பேசுற டயலாக். இதையும் பேசிக்காட்டச் சொன்னார் கமல். இந்த வசனம் இன்னிக்கி வரைக்கும் சூப்பர் ஹிட். யாராலயும் மறக்கமுடியாத வசனமாகிருச்சு.
16 வயதினிலே படத்துக்குப் பிறகு கிழக்கே போகும் ரயில் பண்ணினோம். இதுக்குப் பிறகு அதே வருஷத்துல சிகப்பு ரோஜாக்கள். திரும்பவும் பாரதிராஜா, கமல், இளையராஜா கூட்டணி.
டைரக்டர் சார் பண்ணின முதல் சிட்டி சப்ஜெக்ட். அப்ப பாரதிராஜா சாரையும் என்னையும் கூப்பிட்டார் கமல். ‘இந்தப் படத்துக்கு எப்படிப் பேசணும், என்ன மாடுலேஷன்லாம் இப்பவே சொல்லிருங்க. நீங்களே பேசி வைச்சுக்கிட்டா, எனக்கு என்ன தெரியும்’னு கமல் கேட்டார். உங்க ஸ்டைல்ல பேசுங்க சார். அதுதான் இந்தக் கேரக்டருக்கு பிரமாதமா இருக்கும்னு சொன்னேன்.
அப்புறமா, படம் பண்ணிட்டிருக்கும் போதே, ஒருநாள், பாரதிராஜா சாரைக் கூப்பிட்ட கமல், ‘இவருகிட்ட நிறைய மேட்டர் இருக்கு.பெரிய ஆளா வந்து அசத்தப் போறாரு பாருங்க’ன்னு சொல்லியிருக்கார்.
அன்னிக்கி ஷூட்டிங் முடிஞ்சதும் டைரக்டர் சார் என்னைக் கூப்பிட்டார். ‘யோவ், உன்னை ஆஹா ஓஹோன்னு கமல் சொல்றாருய்யா. பெரியாளா வருவியாம். கமல் கணிப்பு தப்பவே தப்பாதுய்யா’ன்னு பாரதிராஜா சார் சொன்னார். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு”.
இவ்வாறு கே.பாக்யராஜ் பேசினார்.