சென்ற ஆண்டின் சிறந்த மனிதராக (Man of the year 2018) தமிழர் நடுவத்தின் தலைவர் காலம் சென்ற தோழர் செல்வா பாண்டியரை தேர்வு செய்து அவருடைய புகைப்படத்தை முகப்பு பக்கத்தில் இட்டு கௌரவித்துள்ளது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ரியுப்தமிழ் பத்திரிகை.
தமிழக தலைவர் ஒருவருக்கு யாழ் மண் கொடுத்த அதி உயர் மரியாதை இது.
தோழர் செல்வா பாண்டியர் சென்ற ஆண்டின் ஈடு இணையில்லாத தமிழ் தலைவர் என்று தமிழகத்திலும் அவரை போற்றி அவருக்கு தமிழர் தேசிய தந்தை மேதகு செல்வா பாண்டியர் என்ற புகழ் பட்டத்தை தமிழர் நடுவம் வழங்கியிருக்கிறது.
டைம் சஞ்சிகை படுகொலை செய்யப்பட்ட சவுதி ஊடகவியலாளர் ஜமால் காஸ்கோக்கியை மேன் ஒப் தி இயராக தேர்வு செய்தது போல, ரியூப் தமிழ் பத்திரிகை செல்வா பாண்டியரை தேர்வு செய்துள்ளது என்பது இதற்கான எளிமை விளக்கமாகும்.
செல்வா பாண்டியர் சென்ற ஆண்டு மார்ச் மாதம் சாலை விபத்தில் கொல்லப்பட்டார். இறக்கும் போது அவர் கையில் இருந்தது ஈழத் தமிழர் ஒருவர் எழுதிய கிலரி கிளிண்டன் தோற்றாரா தோற்கடிக்கப்பட்டாரா என்ற அரசியல் நூல்.
ஈழத் தமிழர் பெயரை சொல்லி வயிறு வளர்க்கும் எண்ணற்ற கூட்டங்கள் தமிழகத்தில் நிறைந்து கிடக்கின்றன. ஆனால் அவர்களுக்கு முற்றிலும் எதிர் மாறாக ஈழத் தமிழ் மக்களுக்காகவும் அவர்கள் படைப்பிலக்கியங்களை உலகம் முழுவதும் பரவலாக்கம் செய்வதற்காகவும் உயிர் கொடுத்து பாடுபட்டவர் செல்வா பாண்டியர்.
ஈழத் தமிழினின் எழுத்து வெற்றிக்காக உயிர் கொடுத்த முதலாவது தமிழக தலைவன் என்ற சிறப்பு இவருக்கே இருக்கிறது.
இன்று திராவிடத்திற்கு எதிரான கருத்து தமிழகத்தில் மலரவும் திராவிடத்தையே வேரோடு ஆடவைத்த புதுமைக் கருத்தை தமிழகத்தில் விதைத்த முதல் பெரும் சிந்தனையாளர் இவரே.
தைப்பொங்கல் தமிழர் திருநாள்தான் ஆனால் அதை தமிழரல்லாத மு.கருணாநிதி சொல்ல முடியாது. தமிழனான நான் சொல்ல வேண்டுமென தொலைக்காட்சியில் தோன்றி துணிச்சலுடன் கூறிய முதல் பெரும் தமிழ் இளைஞன்.
தமிழர் நடுவத்தை ஆரம்பித்தபோது அவர் சொன்னார் ஒரு கொள்கைக்காக களமிறங்கி பின் பணத்திற்கு சோரம் போன தமிழக தலைவர்கள் பலரைப்போல நானும் மாறமாட்டேன் உயிர் கொடுப்பேன் ஆனால் கொள்கையில் இருந்து மாறமாட்டேன் என்றார். இறுதியில் உயிர் கொடுத்தார் ஆனால் கொள்கையில் இருந்து விலாகமலே விடை பெற்றார்.
தமிழரை ஏமாற்றி குருடராக வைத்து அரசியல் பிழைப்பு நடத்த முற்படுவோரிடையே தமிழர் அறிவுக் கண்களை திறப்பதே அரசியல்.. தமிழ் இளைஞர்கள் தங்கள் அடையாளத்தை மீட்டெடுப்பதே அரசியல். சாதிகளுக்கிடையே புரிதலையும், நட்புறவையும் ஏற்படுத்த பாடுபட்டார்.
சாதி மோதல்களை தூண்டி விட்டு அரசியல் நடத்துவதை முடிவுக்கு கொண்டுவர அறிவார்ந்த கூட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்தினார். புதுமாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து என்ற நூலுடன் தமிழகம் பட்டி தொட்டியெல்லாம் பயணித்து, கோவலன் கொலைக்களம்வரை போனார்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சாதி கலவரங்களால் ஒரு நாளைக்கு தலா மூன்று தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். இதை அடியோடு நிறுத்தி மரணங்களை தடுக்க தமிழகம் முழுவதும் அறிவியல் பயணம் செய்தார்.
தமது பிழைப்பு நாசமாகப் போகிறதே என்று எதிரிகள் விரட்ட உயிர் அச்சமின்றி, உயிரை துச்சமென மதித்து களமாடினார்.
பண்டைத்தமிழர் நில மேலாண்மை என்ற நூலை வெளியிட்டு தமிழர் நிலங்கள் எப்படி பறிபோயின என்பதை தமிழகம் முழுவதும் விளக்க பாடுபட்டார். தெலுங்கர்களால் தமிழர் இழந்து போனதை அம்பலப்படுத்தினார்.
இப்படி செல்வா பாண்டியருடைய போராட்ட வடிவங்களை அடுக்கியபடியே செல்லலாம்.. இலங்கையின் வடக்கு முதல்வர் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் வீரசிங்கம் மண்டபத்தில் அவருடைய உருவப்படத்தை சென்ற ஆண்டு திறந்து வைத்து அளவிலாத பெருமை கொடுத்தது தெரிந்ததே.
துணிந்து இலங்கை சென்ற செல்வா பாண்டியர் பிரபாகரன் இல்லம் சென்று அவர் வீட்டு மண்ணை எடுத்து அதனுடன் விடைபெற்ற வீரத்தமிழனானதும் ஒரு காவியக்கதையே.
இத்தகைய அறிவுள்ள, தியாகமிக்க, ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனை சென்ற ஆண்டின் மேன் ஆப் தி இயராக தேர்வு செய்து, அவருடைய உருப்படம் பொறித்த பத்திரிகையை யாழ் குடாநாடு முழுவதும் வழங்குகிறார்கள் தமிழ் இளைஞர்கள் என்றால் இந்த ஆண்டுக்கு அதைவிட வேறென்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது.
தமிழக தலைவர் ஒருவருக்கு யாழ். இளைஞர்கள் தம் மண்ணில் கொடுத்த அதி உயர் மரியாதை இதுவாகும். சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு ஓடி வந்து களத்தில் நின்று உதவிகளை அள்ளி வழங்கிய தமிழக நிறுவனம் செல்வா பாண்டியரின் தமிழர் நடுவம் என்றால் அது பொய்யல்ல.
ஆம்..! இலங்கை தமிழ் மக்களின் கரங்களில் மட்டுமல்ல இதயங்களிலும் பாண்டியர் நீங்கா இடம் பெற்றுவிட்டார்.
இவருடைய பெருமையை பறைசாற்றும் பாண்டிய நிலா என்ற புகழ் காவியம் இந்த ஆண்டு மார்ச் அவருடைய பிறந்த நாளில் வெளிவர இருக்கிறது.
செல்வா பாண்டியரின் புகழ் ஈழம் முழுவதும் பரவும் வகை செய்வோம்..
அலைகள் 04.01.2019 வெள்ளி