இன்று புலம் பெயர்ந்த நாடுகளில் இளம் தம்பதியர் பலருக்கு வாழ்க்கையை எப்படி வெற்றிகரமாக கொண்டு செல்வதென்பது கடினமாகவே இருக்கிறது. அவசர உலகில் நடக்கும் விரைவு மணங்களும் அதைவிட விரைவான மணமுறிவுகளுக்கும் என்ன காரணம்..?
புரிந்துணர்வின்மை குடும்ப வாழ்வை ஆரம்பத்திலேயே குலைத்து, பெரும் உளவியல் சிக்கல்களை உருவாக்கியும் வருகின்றது.
இந்த நிலையில் இருந்து விடுபட தமிழில் எத்தனையோ அறிவுரை நூல்கள் இருந்தாலும் அவற்றை மேலை நாட்டு வாழ்வில் பயன்படுத்த முடியவில்லை. காரணம் இங்கு வாழ்க்கைச் சூழல் முற்றிலும் மாறியிருக்கிறது.
நாம் இந்த இறுக்கமான சூழலை தளர்த்தி, வாழ்வை காப்பாற்ற வேண்டியிருக்கிறது. அதற்கு ஒரு நல்ல டேனிஸ் மொழி நூல் எதிர்பாராதவிதமாக இன்று காலை என் கையில் கிடைத்தது. அதன் பெயர் வாழக் கற்றுக்கொள் என்பதாகும்.
சுவீடன் நாட்டில் ஓர் இளம் தம்பதியர்க்கு ஏற்பட்ட பிரச்சனையை, அவர்கள் சுயமாக போராடி எப்படி வெற்றி கொண்டார்கள் என்பதை அது கூறுகிறது. இந்த நூல் சொல்வதை நாம் தமிழில் அறிய முற்பட்டால் எப்படியிருக்கும் அதுதான் இந்தப் புதிய தொடர்.
சுவீடன் நாட்டில் உள்ள இளம் தம்பதியர் தங்களுடைய வாழ்வில் ஏற்பட்ட அவலங்களையும், அதிலிருந்து மீண்டு வந்த வரலாற்றையும் புத்தகமாக எழுதி வெளியிட, அது பட்டை கிளப்பிக்கொண்டிருக்கிறது. இதோ அந்தப் புத்தகம் தமிழில் பேச ஆரம்பிக்கிறது.
அத்தியாயம் 01
அன்பான இளம் தம்பதிகளே.. வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டுக் கப்பல் அல்ல. அது கடும் சூறாவளிகளையும், அலைகளையும் தாண்டி உடைந்தோ, தாழ்ந்தோவிடாது பத்திரமாக பயணிக்க வேண்டிய ஒரு பயணம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
அவசர அவசரமாக வாழப்புறப்பட்டு, வாழ்க்கைப் பாரத்தை சுமக்க முடியாது மன அழுத்தம், உடல் வலி, நோய்களுடன் போராடிய சுவீடன் நாட்டின் இளம் தம்பதியரான மாட்ஸ், சூசன் இருவரும் அதிலிருந்து சுயமாக விடுதலை பெற்ற வெற்றி எண்ணங்களைத்தான் இங்கு நாம் நமக்காக பயன்படுத்தப் போகிறோம்.
மாற்ஸ், சூசன் இருவரும் 1995ல் தமது திருமண வாழ்வை ஆரம்பித்தபோது அது வழமைபோல மகிழ்வாகத்தான் இருந்தது. ஆனந்த வாழ்வின் உச்சமாக ஆண்டு மகள் யூலியா பிறந்தாள். 2004ம் ஆண்டு இரண்டாவது மகள் எல்சா 2009 ல் மூன்றாவதாக மகன் மாட்ஸ் பிறக்கிறான்.
ஐந்து பேரைக்கொண்ட அந்த இளம் குடும்பக் கப்பல் தனது சுமையைத் தாங்க முடியாமல் தவித்தது. பிள்ளைகளை யார் பார்ப்பது, பொருளாதார நெருக்கடிகளை தாண்டி குடும்ப வாழ்வை எப்படி மகிழ்வாக்குவது..? போராட்டம் போராட்டம்.. வாழ்வில் புயல் வீச ஆரம்பித்தது.
டிப்பிரசன், பயம், வாழ்வே எரிந்தது போன்ற சூழல், சுகயீனம்..
இருவரும் பிரிந்து போகும் விளிம்பு நிலைக்கு வாழ்வே வந்துவிட்டது. வைத்தியரை நாடினார்கள். அவர்கள் ஸ்ரெஸ் நோயில் எப்படி சிக்குண்டீர்களோ அதுபோல நீங்கள்தான் வெளியே வரவேண்டும். ஆகவே முதலில் உங்கள் வாழ்க்கையின் நிலையை படிப்படியாக ஒரு குறிப்புப் போல எழுதுங்கள் என்று வழிகாட்டினார்கள்.
குறிப்புக்களாக எழுதுவது ஒரு வடிகால்தானே..
அந்த வடிகால் எழுத்துக்களே 2015ல் நூல் வடிவில் வந்து சுவீடன் நாட்டில் பட்டையை கிளப்பியது. புத்தக விற்பனையில் சாதனை படைத்த புத்தகம் என்றும் போற்றப்பட்டது.
இன்றைய உலக மயமாக்கல் சூழலில், சக மனிதனை மதியாது, கண்களை கட்டிய குதிரைகளாக வெற்றி நோக்கி, ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டபடி ஓடுகின்றன குடும்பங்கள்.
இந்த பரபரப்பு வாழ்வில் அறுந்த காற்றாடிகளாக பறக்கும் குடும்பங்கள் படிக்க வேண்டிய செய்திகள் நிறையவே இருந்த காரணத்தினாலேயே அந்த புத்தகம் வெற்றிப் புத்தகமானது.
ஒரு விரக்தி வாழ்வை வெற்றி வாழ்வாகவும் மாற்றிக்காட்டினார்கள் மாற்ஸ், சூசன் தம்பதியர்.
ஆம் இற்றைக்கு பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னரே அவர்களுடைய வாழ்வு வெற்றிப் பாதையில் திரும்பிவிட்டது. இருவர் வாழ்விலும் நடந்தவைகளை அறிய அவர்கள் முகநூலைமட்டும் 25.000 பேர் பின் தொடர்ந்தார்கள் என்றால் பாருங்களேன்.
அதைப்படித்தவர்கள் பாராட்டு மழைகளை பொழிந்தனர்..
எங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கும் நீங்கள் எடுத்த முடிவுகள் உதவியுள்ளன என்று பலர் கடிதங்களை அனுப்பினார்கள். சுவீடன் நாட்டு பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் பரபரப்படைந்து அவர்கள் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தன. பலர் மாட்சை அழைத்து தன்னம்பிக்கை பேச்சுக்களை நடத்தும்படி அழைத்தார்கள்.
வாழ்க்கையை குலைத்த சூறாவளி இப்போது வாழ்க்கையை வெற்றிப்பாதைக்கு தரதரவென இழுத்துச் செல்ல ஆரம்பித்துவிட்டது.
அப்படி அவர்கள் இருவரும் சொன்ன செய்திகள் என்ன.. அவை வாழ்வெனும் மலையில் பூத்த மகத்தான குறிஞ்சிப்பூக்களாகும், அவைதான் நமக்கு வேண்டும்.
இதோ முதலாவதாக அந்தப் பூக்களில் ஒன்றைப் பிடுங்கி உங்கள் கைகளில் தருகிறேன்.
சூசன் சிறுவயதில் கெட்டிக்காரியாக இருந்தாலும் அதை அவளால் அப்படியே வெற்றிகரமாக தொடர முடியவில்லை. அவளுடைய ஆமைபோல அடங்கிக் கொள்ளும் போக்கால் வாழ்க்கை மாறுகிறது. காரணம் அவள் மற்றவர் கூறுவதை காது கொடுத்துக் கேட்கும் பெண்மணியல்ல. அதுமட்டுமல்ல தனக்கு புரியாவிட்டாலும் மறுபடியும் கேட்கும் பழக்கமும் அவளிடம் இருக்கவில்லை.
இந்த சிறுவயது பழக்கம் குடும்ப வாழ்வில் ஒரு புயலாக வீசப்போகிறது என்பதை அவள் அன்று புரியவில்லை. இதனால் பிள்ளைகளோடும், கணவனோடும் அவளால் ஒரு புரிதலை வளர்த்துக்கொள்ள முடியவில்லை.
கணவன் மாட்ஸ் பொருளாதார பிரச்சனையில் தவிக்கிறான். எங்கே குடும்பத்தை நிர்வகிக்க முடியாது போய்விடுமோ என்ற அச்சம் அவனை நாளுக்கு நாள் விரட்டுகிறது. இதனால் குடும்பத்திற்காக செலவிட நேரமே இல்லாமல் அவன் அன்றாட வாழ்க்கை போராட்டமாகிறது.
இதனால் தம்பதியரால் தமது குடும்ப வாழ்வை வெற்றிகரமான, சந்தோஷமான வாழ்வாக மாற்ற முடியவில்லை. வாழ்க்கை முற்றாக எரியப்போகிறது. கண்டிப்பாக அந்த நெருப்பை அணைத்தாக வேண்டும்.
உனது வாழ்க்கையை சிறப்பாக மாற்றியமைக்கும் விசை உன்னிடம் படைக்கப்பட்டுள்ளது அதைக்கண்டு பிடி என்று வாழ்வின் குரல் கேட்டது.
அதைக் கேட்டு இந்த நிலையை எப்படி மாற்றினார்கள் என்ற குறிப்புரையின் முதலாவது அத்தியாயத்திற்கு வருகிறார்கள். அதுதான் காது கொடுத்துக் கேட்கும் பழக்கமாகும்.
அதோ அவர்கள் வீட்டிற்கு அருகே அமைதியாக வாழும் ஒரு குடும்பம் இருக்கிறது. இவர்கள் ஏன் நமக்கு அருகில் வாழ்கிறார்கள்.. சந்தேகமே வேண்டாம் நமக்கான உதவி அவர்களிடம் இருக்கும் என்று இருவரும் நினைக்கிறார்கள்.
அன்றே ஈவா, ஸ்ரீ என்ற அந்தத் தம்பதியரை சந்திக்கிறார்கள்.
அன்றுதான் இருவரும் தமது வாழ்வுக்காக நேரமொதுக்கிய தங்கமான பொழுதை கண்டு பிடித்தார்கள், இது முதல் வெற்றியல்லவா…?
சிறிய அறிமுகத்தின் பின் இருவருடைய பிரச்சனைகளையும் அத்தம்பதியர் அமைதியாக காது கொடுத்து கேட்கிறார்கள். ஆம் அவர்கள் வாழ்க்கையை மதித்து வாழ்வுக்காக நேரம் ஒதுக்குகிறார்கள்.
பின்னர் சொல்கிறார்கள், “உங்கள் இருவர் பிரச்சனைகளையும் நாம் காது கொடுத்து கேட்டிருக்காவிட்டால் எம்மால் புரிந்திருக்க முடியாது ஒப்புக்கொள்கிறீர்களா..?”
” ஆம்..!”
” நல்லது ஆனால் காது கொடுத்து கேட்டால் மட்டும் பிரச்சனை முடிந்துவிட்டதா.. இல்லை. மற்றவரும் கருத்துரைக்க இடம் விட வேண்டும். உரையாடல் பாதிவழி வந்ததும் மற்றவர் பேச காற்றுக் கொடுக்க வேண்டும். இருவரும் ஒருவர் கருத்தை மற்றவர் காது கொடுத்து கேட்க பழகுங்கள் இது முக்கியமான விடயமாகும்.”
” இப்படி ஒருவர் கருத்தை மற்றவர் கேட்டால் மட்டும் போதுமா..? இல்லவே இல்லை அதைவிட முக்கியமான இன்னொருவரின் கருத்தையும் கூடுதல் கவனமெடுத்து கேட்க வேண்டும். அவர்தான் உங்களுடைய உடம்பு.”
” நீங்கள் ஓய்வில்லாமல் உழைக்கும்போது ஒரு கட்டத்தில் உடம்பு களைத்துவிடும். அப்போது தலைவலி, களைப்பு, மன வெறுப்பு, இன்பெக்ஷன், சுகயீனம் போன்ற எச்சரிக்கைக் குறியீடுகளை உடம்பு அனுப்பும். அதையும் காது கொடுத்து கேட்க வேண்டும். உடம்பின் குரலை மதித்து நீங்கள் செய்யும் கடுமையான பணியை நிறுத்திவிட வேண்டும்.”
” வேண்டுமானால் கவனத்தைத் திசை திருப்பி வேறொரு வேலையை செய்யலாம். உடம்பு தயாராகும்வரை காத்திருப்பது அவசியம். உதாரணமாக இது கார்களை ஓயில் மாற்ற அனுப்புவது போன்ற நிலை என்று புரிய வேண்டும்.”
” அது மட்டுமல்ல உங்கள் வாழ்வில் மோசமான ஸ்ரெஸ் ஏற்பட பின்வரும் ஐந்து காரணங்களும் பின்னால் இருந்து விசை கொடுக்கும். அவற்றையும் புரிந்து கொள்ளுங்கள்.”
01. நாங்கள் பாதிப்புக்கள் எதுவுமின்றி பெரும் சாதனை படைக்கப்போகிறோம் என்று ஓய்வின்றி செயற்படுவது.
02. நாங்களே உலகிற்கு உற்பத்திதரும் ஒரே மனிதர்கள் என்று வேகமாக செயற்படுவது.
03. நாங்கள் எங்கள் பிரச்சனைகளை மனம் விட்டு பேசக்கூடாது. அப்படி பேசினால் மற்றவர் எம்மை தப்பாக நினைப்பார்களோ என்று கருதி பேசாமலே இருப்பது.
04. மற்றவர்களின் தேவையற்ற பாரங்களை நாம் சுமக்கமாட்டோம் என்று கூறுவது.
(கணவனின் பாரத்தை மனைவியும் அதுபோல கணவனும் சுமக்க மறுப்பது)
05. எங்களுக்கு மற்றவரின் உதவியை நாடுவது மிகமிக கடினமென கருதி நாமே தனித்து எல்லாவற்றையும் தலையில் போட்டு செயற்படல்.
இந்த ஐந்து விடயங்களையும் தவிர்த்துவிடுங்கள். ஏனென்றால்..
” இது வாழ்க்கை இங்கு கட்டாயமாக செய்யத்தான் வேண்டுமென்ற கட்டளை எதுவும் கிடையாது. முதலில் வாழ்வை இலகுபடுத்துங்கள். நீங்கள் மட்டுமே இந்த உலகம் இயங்க தனியொருவராக பாடுபட வேண்டுமென நினைக்க வேண்டாம். ஏனென்றால் நாங்கள் மனிதர்கள் நம்மால் முடியாதபோது மற்றவர்களிடம் கண்டிப்பாக ஆறுதலும் உதவியும் கேட்க வேண்டும். நீங்கள் உங்கள் இறுக்கமான சூழ்நிலையில் தளர்வை ஏற்படுத்த வேண்டும். எப்போதுமே ஒருவருக்கு ஒருவர் உதவி வழங்க வேண்டுமென்று ” கூறினார்கள்.
” கிளிக் ” எரிந்தது முதல் விளக்கு..!
நமக்கு அருகிலேயே நமக்கான நல்ல செய்திகளை தர வல்லவர்கள் இருக்கிறார்கள் என்ற செய்தி அவர்கள் வாழ்வில் மாற்றத்திற்கான முதல் விளக்கைப் போட்டது.
இனி அடுத்த வாரம்
இரண்டாம் அத்தியாயம்.
கி.செ.துரை 05.01.2019