தங்களின் விவாகரத்து தகவல்களை பெண்கள் அறியமுடியாமல் போவதை தடுக்க, சௌதி அரேபியா புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளது.
இன்று (ஞாயிறு) முதல், விவாகரத்து வழக்கின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது குறித்த தகவலை குறுஞ்செய்தியாக பெண்களுக்கு நீதிமன்றங்கள் அனுப்பி வைக்கும்.
இத்தகைய நடவடிக்கைகள், மனைவியிடம் கூறாமலேயே விவாகரத்து பெறும் ஆண்களின், `ரகசிய விவாகரத்துகளை` தடுக்கும் என்று உள்ளூர் பெண் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த முடிவு, பெண்கள் தங்களின் திருமண நிலை குறித்த முழு விவரத்தை அறிந்திருக்க உதவுவதோடு, ஜீவனாம்சத்திற்கான தங்களின் உரிமைகளை காத்துக்கொள்ளவும் உதவும்.
கடந்த ஆண்டு, சௌதி அரேபிய பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கான தடை விலக்கிக்கொள்ளப்பட்ட போதிலும், இன்னும் ஆண்களின் பாதுகாப்பு சட்டத்திற்கு கீழே பெண்கள் இருக்கின்றனர்.
“இந்த புதிய நடைமுறை விவாகரத்து ஆகும்போது, பெண்கள் தங்களுக்கான உரிமையை (ஜீவனாம்சம்) பெறுவதை உறுதிசெய்யும். மேலும், அவர்களின் விவாகரத்து தவறாக பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, அவர்களுக்கு தேவையான எந்த விதமான அங்கீகாரமும், அவர்கள் பெறுவதை இது உறுதிசெய்யும்” என்று புலூம்பர்க்கிற்கு பேட்டியளித்துள்ளார் சௌதி அரேபிய வழக்கறிஞரான நிஸரீன் அல்-அம்தி.
உள்நாட்டு பத்திரிகையான ஒக்காஸிற்கு பேட்டியளித்துள்ள வழக்கறிஞர் சமியா அல்-ஹிந்தி, தங்களுக்கு தெரியாமலேயே விவாகரத்து வழங்கப்பட்டுவிட்டதாகக் கூறி, பல பெண்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
சௌதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் கூறிய வகையில், பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாடுகளில் பெண்களை பங்கெடுக்க செய்தல், அவர்களுக்கான அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது. , இதுவரை ஆண்களே பணியாற்றி வந்த வேலைகளில் பெண்களை பணியாற்ற அனுமதிப்பது, பொது மைதானத்திற்கு சென்று கால்பந்து விளையாட்டை பார்ப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
சௌதி பெண்கள் எவற்றையெல்லாம் செய்ய முடியாது?
தன் குடுமபத்திலுள்ள ஆணின் துணையின்றி இன்னும்கூட சில விஷயங்களை சௌதி அரேபியாவிலுள்ள பெண்களால் செய்ய முடியாது.
அவற்றில் சில:
பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்தல்
வெளிநாட்டிற்கு பயணித்தல்
திருமணம் செய்துகொள்வது
வங்கிக்கணக்கை தொடங்குவது
குறிப்பிட்ட சில வணிகங்களை செய்தல்
சிறையைவிட்டு வெளியேறுதல்