உண்மையுடன் கூடிய கீழ்ப்படிவு. (விசுவாசத் தீர்மானம்)
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
உன்னதத்தின் ஆறதல் நேயர்கள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த புதுவருட நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். புதுவருடத்தில் இருந்து வாழ்க்கையில் அனைத்து தேவைகளிலும் சுபீட்சம் அடைந்து நிறைவாக வாழ வாழ்த்துகிறோன்.
இன்று உன்னதத்தின் ஆறுதல் நற்சிந்தனை 10 வருடநிறைவை முடித்து ஓர் புதிய ஆண்டிற்குள் காலடி எடுத்துவைக்கிறது. பலருடைய தனிப்பட்ட வாழ்வில் இத்தியானம் ஆறுதலைக் கண்டுகொள்ளும் வழியாக இருந்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடை கிறேன். பாராட்டு தெரிவித்து வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கு எனது நன்றிகள். அலைகள் ஆசிரியர் திரு. கே. செல்லத்துரை குடும்பத்தினருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேவன் அவர்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதித்பாராக.
விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான்போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான். எபிரேயர் 11:8
மீண்டும் ஒருபுதிய வருடத்துக்குள்ளே புதிய தீர்மானங்களோடும், திட்டங்களோடும், எதிர்பார்ப்புக்களோடும் நாம் பிரவேசித்திருக்கிறோம். ஆண்டுதோறும் புதிய தீர்மான ங்கள் எடுப்பதும், பிற்பாடு அவற்றை தவறவிடுவதும், மறந்து வாழ்வதும், வருட இறுதியில் மீண்டும் பழையநிலைக்கு வந்து புதிய தீர்மானங்கள் எடுப்பதும் எமக்கு பழகிப்போன காரியமாகும். ஏன் இந்த நிலை எமக்கு? எமது உறுதிகள் – தீர்மானங்கள் உடைந்து, மறைந்து போவதன் காரணம் என்ன? எமது பெலவீனமா? உண்மையற்ற தன்மையா? (விசுவாசக் குறைவா?)
ஆபிரகாமுக்கு தேவனிடத்தில் இருந்து அழைப்பு வந்தது. கர்த்தர் ஆபிராமை நோக்கி, நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. ஆதியாகமம் 12:1. இந்த அழைப்பை ஆபிரகாம் பெற்றபோது, தான் போகும் இடம் இன்னதென்று அறியாதவராக விசுவாசத்தில் தீர்மானம் எடுத்தவராக கீழ்ப்படிந்து புறப்பட்டுப்போனார்.
அவரது கீழ்ப்படிதலை தேவன் கண்டார். அவர் எடுத்த தீர்மானத்தை தேவன் கனப் படுத்தினார். ஆபிரகாம் தனது பெலனையும், தனது உறுதியான தீர்மானத்தையும் நம்பிப் புறப்படாமல், தன்னை அழைத்தவரையே நம்பி விசுவாசத்துடன் புறப்பட்டுச் சென்றார்.
இவ்வருடத்தின் முதல் வாரத்தில் வந்து நிற்கும் எமது நிலையும் இதே நிலதான். இவ்வருடத்தில் நடக்கப்போகும் காரியங்கள் என்னவென்று நமக்குத் தெரியாது. நமக்கு வரப்போகும் வீழ்ச்சிகளும், உயர்ச்சிகளும் நமக்கு தெரியாது. நமக்கு முன்பாக உள்ள சவால்கள் என்ன? நாம் முகங்கொடுக்க இருக்கும் பிரட்சனைகள் என்ன? எமக்கு எதுவுமே தெரியாத ஒரு நிலையில் இப்புதிய வருடத்திற்குள் பிரவேசித்திருக்கிறோம்.
ஆகையால் எம்மை அழைத்த தேவன்மீது முழு நம்பிக்கையும் வைத்தவர்களாய், ஒவ்வொரு தீர்மானத்தையும் விசுவாசத்துடன் எடுப்போம். எல்லாச் சூழ்நிலைகளுக் கூடாகவும் விழுந்து விடாமல் வெற்றியோடு கடந்து செல்ல தேவனின் பெலனை வேண்டி நிற்போம். தேவனின் பாதத்தில் அமர்ந்திருப்போம். எமது சொந்தப் பெலனாலும் முயற்சியாலும் முடியாதவைகளெல்லாம் எம்மைப் பெலப்படுத்தும் கிறீஸ்துவினால் முடியும் என்ற விசுவாசத்துடன் எமது தீர்மானங்களை உறுதியாக எடுப்போம். அப்பொழுது அவர் எமது தீர்மானத்தை கனப்படுத்தி தமது பெலனால் எம்மை காத்துக்கொள்வார்.
கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் வெற்றி வாழ்வு வாழும்படியாக அழைத் திருக்கிறார். இன்றும் அழைக்கிறார். நாம் தோற்றுப் போனவர்கள் அல்ல. வெற்றி முழக்கமிடும் மக்கள் என்பதை மறக்க வேண்டாம். எந்த நம்பிக்கையற்ற சூழ்நிலை களிலும் நம்பிக்கை தருகிறவர் நம் கர்த்தராகிய தேவன். அதற்காக பிரட்சனைகள் துன்பங்கள் வரமாட்டாது என்பதல்ல. எல்லாம் வரும். ஆனாலும் தேவன் கூட இருப்பார். விட்டு விலகமாட்டார்.
கர்த்தர் தரும் அந்த நம்பிக்கை நமது வாழ்வில் நிலைத்து இருக்க வேண்டுமானால், நமக்கு இந்த ஆண்டு ஆசீர்வாதமாகவும், நன்மையாகவும் இருக்க வேண்டுமானால் நாம் செய்ய வேண்டியபங்கு ஒன்று உண்டு. நன்மையும் தீமையும் நமக்கு முன்னே வைக்கப்பட்டிருக்கிறது. நாம் எதைத் தெரிந்தெடுக்கப் போகிறோம் என்பதே கேள்வி. நமது தெரிந்தெடுப்புக்களே நமது வாழ்வில் தாக்கத்தை கொண்டுவரும். நாமும் நமது சந்ததியும் பிழைக்க வேண்டுமானால் ஜீவனைத் தெரிந்து கொண்டு தேவனின் அழைப்பை ஏற்று அவர் பின்செல்வோம்.
தேவனின் வார்த்தை பின்வருமாறு கூறுகிறது. உன் கண்கள் நேராய் நோக்கக் கடவது@ உன் கண்ணிமைகள் உனக்குமுன்னே செவ்வையாயப்; பார்க்கக்கடவது. உன்கால் நடையைச் சீர்து}க்கிப்பார்@ உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக. வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாதே@ உன் காலைத் தீமைக்கு விலக்கு வாயாக. நீதிமொழி 4:25-27.
இப்புதிய ஆண்டில் தேவனின் அழைப்பை ஏற்று அவர் வழியில் நடப்போம். அப்போது நமது வாழ்வு தேவ பாதுகாப்பு நிறைந்த வாழ்வாக அமையும்.
அன்பின் ஆண்டவரே, இன்று இந்த சிந்தனையூடாக உமது வார்த்தைக்கு தம்மை அர்ப்பணித்த ஒவ்வொருவருக்காகவும் உமக்கு நன்றி அப்பா. அவர்களின் வாழ்க்கையில் இன்றிலிருந்து தேவபாதுகாப்பையும் தேவவழிநடத்தலையும் உணரப் பண்ணி, உம்மை அறிகிற அறிவில் வளர அவர்களை காத்து வழிநடத்தும்படியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark.