டென்மார்க்கில் குடியேறி, டேனிஸ் பெண்மணியை மணமுடித்து, குழந்தைகளையும் பெற்று கூடவே குடியுரிமையும் பெற்று ஒரு புத்தகக் கடை நடத்தி வாழ்ந்தவர் செயட் மன்சூர் என்ற மொறோக்கோ நாட்டு பிரஜை.
இவர் பயங்கரவாத அல் குவைடா அமைப்பின் ஆதரவாளர் என்று குற்றம் சுமத்தப்பட்டு குடியுரிமை பறிக்கப்பட்டு, சில தினங்களுக்கு முன்னர் மொறோக்கோவிற்கு நாடும் கடத்தப்பட்டுள்ளார்.
இவரை மொறோக்கோ அரசு சித்திரவதை செய்யும் என்று கூறியிருந்தார் அவருடைய சட்டத்தரணி. ஆனால் இப்போது மொறோக்கோவில் தடுப்புக்காவலில் விசாரிக்கப்பட்டுவரும் 58 வயது மன்சூர் சில தினங்களில் விடுதலை செய்யப்பட்டு இயல்பு வாழ்வு வாழ அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
டென்மார்க் வரலாற்றில் குடியுரிமை பெற்ற ஒருவர் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து, நாடுகடத்தப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும். இந்தச் சம்பவம் மேலும் பல நாடுகடத்தல்களுக்கும், பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செயட் மன்சூர் 2007ல் கைதாகி மூன்றரை வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றவர் பின்னர் வேறொரு வழக்கில் 2014 ம் ஆண்டு கைதாகி நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றவர். தொடர்ந்து 2016ம் ஆண்டு இவரிடமிருந்த குடியுரிமை பறிக்கப்பட்டதுடன் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் (எப்போதும்) என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
ஆகவே இவர் இனி எக்காலத்திலும் டென்மார்க் மண்ணில் கால் பதிக்க முடியாது. எப்போதும் என்ற ஒரு சொல் அவர் உள்ளே மறுபடியும் வந்தால் திருப்பி அனுப்பப்படுவார் என்ற கருத்து இருக்கிறது.
இப்படியொரு அவல நிலையை அவர் தானே தேடிக்கொண்டார். உண்மையில் தன்னைப் பாதுகாத்திருக்க வேண்டியது அவருடைய கடமையாகும். யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டால் என்ன செய்வது என்பது போல நாம் அலட்டிக்கொள்ள முடியாது என்று டேனிஸ் மக்கள் கட்சி பேச்சாளர் நாடு கடத்தலுக்காக திருப்தியும் தெரிவித்துள்ளார்.
வழமைபோல மனித உரிமைகள் ஆணையம் இது குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. முன்னதாக டேனிஸ் ஸ்ரேற்மினிஸ்டர் லாஸ்லொக்க ராஸ்முசன் மொறோக்கோ சென்று வந்திருந்தார்.
சிலவேளை அவர் இது குறித்து மொறோக்கோ அரசுடன் பேசியிருக்கலாம். பொதுவாக திருப்பி அனுப்பப்படுவோரை சித்திரவதை செய்யாமல், கைது செய்யாமல் இருந்தால் பெருந்தொகையானவர்களை திருப்பி அனுப்ப வழியிருக்கும் என்பதையும் மறுக்க இயலாது.
ஏற்கெனவே 2006ம் ஆண்டு மொறோக்கோ நாடு செயட் மன்சூரை தம்மிடம் ஒப்படைக்கும்படி கேட்டும் டென்மார்க் ஒப்படைக்கவில்லை என்பது கூடவே வரும் ஒரு பழைய செய்தி.
அலைகள் 07.01.2019