குவைத்தில் இருந்து தப்பித்து ஆஸ்திரேலியா செல்லும் வழியில் தாய்லாந்து வந்திறங்கிய சௌதி அரேபிய பெண் அவரது விருப்பத்துக்கு மாறாக அவரது தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படமாட்டார் என்று தாய்லாந்து குடியேற்றப் பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.
தாம் இஸ்லாம் மதத்தை துறந்துவிட்டபடியால், தம்மை தம் குடும்பத்திடம் திருப்பி அனுப்பினால் தாம் கொல்லப்படலாம் என்று ரஹாஃப் மொஹம்மது-அல்-குனன் என்ற அந்த 18 வயதுப் பெண் தெரிவித்துள்ளார்.
அடைக்கலம் கோரத் திட்டமிட்டுள்ள அந்தப் பெண் தற்போது ஓட்டல் அறை ஒன்றில் இருக்கிறார். அகதிகளுக்கான ஐ.நா. ஹை கமிஷன் அலுவலர்கள் அவரைத் தொடர்புகொண்டுவருகிறார்கள்.
தனது குடும்பத்தினரே தன்னை உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாகக் கூறிய ரஹாஃப், அவர்களிடம் இருந்து தப்பி ஆஸ்திரேலியா செல்ல முடிவெடுத்துள்ளார்..
இதற்காக தாய்லாந்தில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையம் வந்தவரை சவுதி மற்றும் குவைத் அதிகாரிகள் சுற்றி வளைத்ததாகவும் அவரின் பயண ஆவணங்களைப் பிடுங்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ரஹாஃப், ”குவைத்துக்கு என்னை நாடு கடத்துவதற்காக குவைத் ஏர்வேஸ் விமானத்தில் அனுப்ப முடிவு செய்திருக்கின்றனர். இதை நிறுத்துமாறு தாய்லாந்து அரசிடம் கேட்கிறேன். தாய்லாந்து காவல்துறையினர் எனக்குப் புகலிடம் அளிக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும். மனிதத்தோடு எனக்கு உதவுமாறு இறைஞ்சிக் கேட்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
அத்துடன் ரஹாஃப், அதிகாரிகள் தன்னை அனுப்பாமல் இருக்க ஹோட்டல் அறையின் சாமான்களைக் கொண்டு தடுப்பரண் அமைத்து அதனுள் இருப்பது போன்ற வீடியோவையும் வெளியிட்டார்.
இதுகுறித்து ஏஎஃப்பியிடம் பேசிய ரஹாஃப், ”என்னை மீண்டும் சவுதிக்கு அனுப்பினால் என் குடும்பத்தினரே என்னைக் கொன்று விடுவர். இது 100 சதவீதம் உண்மை” என்றார்.
இந்நிலையில் அவரின் ட்விட்டர் பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. அவரின் நிலை என்னவானது என்று தெரியவில்லை.
இதனிடையே பேங்காக்கில் உள்ள சவுதி தூதரக அதிகாரி கூறும்போது, ரஹாஃபின் தந்தை தூதரகத்தைத் தொடர்பு கொண்டு, ரஹாஃபைத் திருப்பி அனுப்பும்படி கூறியதை உறுதிப்படுத்தினார்.
ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகமை வெளியிட்ட அறிக்கையில், ”புகலிடம் கேட்கும் ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்போது, அவரை சொந்த நாட்டுக்கு அனுப்பக் கூடாது” என்று தெரிவித்துள்ளது.