நான் வாக்குகளுக்காகவும், தேர்தல்களை முன்னிலைப்படுத்தியும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லை. மக்கள் எனக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் மக்கள் பணியை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றேன். பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய பிரச்சினை குறித்த வழக்கிற்கு, எட்டு இலட்சம்ரூபா எனக்கு தேவைப்படுகின்றது. நான் நேர்மையாக நடந்துள்ளேன். உண்மையும், சத்தியமும் வெல்லும். என்னிடம் எத்தகைய இன, மத, கட்சிப் பேதங்களும் கிடையாதுஎன மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க குறிப்பிட்டார்.
அகில இலங்கை சோனகர் சங்கத்தின் பதுளைக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பதுளை அல் – அதான் மகா வித்தியாலயத்தின், க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (06)பதுளை கிறீன்வூட் உல்லாச விடுதியில் நடைபெற்றது. அந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதேஅவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
ஊவா மாகாணத்தில் இரண்டரை வருட காலமாக, தமிழ், சிங்களம், முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் எனது பொறுப்பிலேயே இருந்து வந்தன. எந்தவொரு குறைபாடுகளுமின்றி, மூவினப் பாடசாலைகளையும் முறையாக நடாத்தி வந்தேன். பதுளை தமிழ் மகளிர் பாடசாலையில் ஏற்பட்ட பிரச்சினையொன்றையடுத்து மாகாண தமிழ்ப்பாடசாலைகளை விடுத்து, முஸ்லிம், சிங்களப் பாடசாலைகள் அனைத்தையும் எனது பொறுப்பில் விடுமாறுகேட்டுப் பெற்றுக் கொண்டேன். தற்போது மாகாண தமிழ்ப் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் பலர் தமிழ்க் கல்வி நிலையின் பின்னடைவுகள் குறித்துஎன்னிடம் விசனம் தெரிவித்து வருகின்றனர். அது குறித்து எனக்கும் கவலையைத் தருகின்றது.
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய பிரச்சினை குறித்த வழக்கிற்குரூபாஎட்டு இலட்சம்எனக்கு தேவைப்படுகின்றது. நான் நேர்மையாக நடந்துள்ளேன். உண்மையும், சத்தியமும் வெல்லும். என்னிடம் எத்தகைய இன, மத, கட்சி பேதங்களும் கிடையாது. மக்கள் பணியே எனது இலட்சியம். நான் முதலமைச்சராகி மூன்றரை வருடங்களில் ஊவா மாகாணத்தின் இரண்டு பாடசாலைகளைத் தவிர அனைத்துப் பாடசாலைகளுக்கும் சென்றுஅப்பாடசாலைகள் அனைத்தின் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்திருக்கின்றேன். என்னால் போக முடியாத இரு பாடசாலைகள் மட்டுமே உள்ளன. அப்பாடசாலைகளின் குறைபாடுகளையும் விரைவில் நிவர்த்தி செய்வேன்.
நான் வாக்குகளுக்காகவும், தேர்தல்களை முன்னிலைப்படுத்தியும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லை. மக்கள் எனக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் மக்கள் பணியை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றேன். இம் முதலமைச்சர் பதவி நிரந்தரமற்றது. நான் என்றுமே மக்களுடன் இருக்கின்றேன். நாட்டிலுள்ள மாகாண சபைகளிலேயே, எனது தலைமையிலுள்ள ஊவா மாகாண சபையில் மேற்கொண்டது போல் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் மக்கள் பணிகள் எந்தவொரு முதலமைச்சரும் செய்யவில்லை. இதனை மக்களே பரிசீலனை செய்து பார்த்துக் கொள்ளலாம்’ என்றார்.