ஓடாத படத்துக்கெல்லாம் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள் என்ற ஐஸ்வர்யா ராஜேஷின் பேச்சு ‘கனா’ படக்குழுவினரை அதிர வைத்தது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமான படம் ‘கனா’. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
டிசம்பர் 21-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், அன்றைய தினத்தில் வெளியான 5 படங்களில் ‘கனா’ படத்துக்கு கணிசமாக திரையரங்குகள் உயர்த்தப்பட்டன.
இப்படத்தின் பொருட்செலவுக்கு வந்த வசூல் மிகப்பெரியது என்பதால், வெற்றி விழா கொண்டாடியது ‘கனா’ படக்குழு. இவ்விழாவில் படு ரகளையாக ஒருவரை ஒருவர் பயங்கரமாக கலாய்த்துக் கொண்டனர்.
இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் தன் பேச்சின் மூலம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். சிவகார்த்திகேயன், சத்யராஜ் உள்ளிட்ட பலருமே அவரது பேச்சால் கொஞ்சம் பயந்து தான் போனார்கள்.
ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் போது, “குறைந்த திரையரங்குகளே கிடைத்தாலும், இப்படம் வெற்றி பெறக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. பெண்ணை மையமாக வைத்து கிரிக்கெட் படம் எடுக்கும் போது, அதுவும் குறுகிய பட்ஜெட் என்னும் போது பல விஷயங்கள் யோசிப்பார்கள்.
அப்படிப்பட்ட படத்துக்கு என் மீது நம்பிக்கை வைத்த சிவா, கலையரசு, இயக்குநர் அருண்ராஜா காமராஜ் ஆகியோருக்கு முதல் நன்றி. இவர்கள் தான் என்னை முழுமையாக நம்பினார்கள். கிரிக்கெட் பயிற்சியின் போது 3 நாட்கள் மட்டுமே இயக்குநர் வந்தார். பிறகு இவரால் முடியும் என்று விட்டுவிட்டார்.
எனக்கு என் அப்பா இல்லாதது ஒரு குறையாகத் தெரிந்ததில்லை. ஏனென்றால், என் அம்மா அப்படித்தான் வளர்த்தார். நாயகிகளுக்குத் திரையுலகில் குறைவான காலம் என்பதால், என்ன படம் வந்தாலும் நடி என்பார் அம்மா. ஆனால், ‘கனா’ பார்த்துவிட்டு நீ படமே நடிக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. இப்படம் உன் சினிமா வாழ்க்கைக்குப் போதும் என்றார். அதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு” என்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் ஒவ்வொருவரது பெயரையும் குறிப்பிட்டு நன்றி சொன்னார். இறுதியாக “இப்போது எல்லாம் வெற்றி பெறாத படத்துக்குக் கூட வெற்றி விழா கொண்டாடுறாங்க” என்று பேசத் தொடங்கினார். உடனே சிவகார்த்திகேயன் எழுந்து கிண்டலாக கொஞ்சம் கீழே வந்துடுங்க என்றார். அப்போது அங்கிருந்த டி.ஜே குழுவினர் “ஒரு தென்றால் புயலாகி வருதே” என்ற பின்னணிப் பாடலைப் போட்டுவிட, அரங்கமே சிரிப்பலையில் ஆர்ப்பரித்தது.
ஐஸ்வர்யா ராஜேஷைத் தொடர்ந்து சத்யராஜைப் பேச அழைத்தனர். அப்போது, “இந்தப் படக்குழுவினருக்கு அனைவருக்குமே பல மேடைகளில் நன்றி சொல்லிட்டேன். இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் யாருக்கெல்லாம் நன்றி சொன்னாங்களோ, அதை அப்படியே ஆமோதிக்கிறேன். அவர் இறுதியாக பேசியதைத் தவிர” என்று பேசினார்.