கண்டியில் ஏற்பட்ட தீ விபத்து புலம் பெயர் நாடுகளில் முக நூல்களிலும், வாட்ஸ் ஆப்பிலும் பரவியது போல கடையின் தீ கூட பரவியதாகக் கூற முடியாது.
ஆளையாள் திருப்பி திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.. லைக்குகள் பெற..
கடைகளும், கட்டிடங்களும் தீப் பிடிப்பும், அதை மீட்க தியணைப்புப் படைகளும் இல்லாமல் மக்களே மாடியில் இருந்து பாயும் காட்சி ஆச்சரியத்தை கொடுத்தது.
முதலில் வட இந்தியாவில் எங்கோ ஒரு பின்தங்கிய மாநிலத்தில் நடப்பதைப் போல இருந்தது, பின்னரே சிங்கள மொழியில் குரல்கள் கேட்டன. அப்போதுதான் இது சிறீலங்கா என்று தெரிந்தது.
முதலில் கட்டிடங்களை இவ்வளவு நெருக்கமாக அமைக்கக்கூடாது.. இரண்டாவது தீயணைப்பு படை வாகனம் போக போதிய வழி காணப்படவில்லை. மூன்றாவது காட்சியை பார்க்கும் நேரம்வரை தீயணைப்பு படை வரவில்லை.
கண்டி ஒரு பெரிய நகரம் தீயணைப்பு இப்படியா இருப்பது..?
அருகில் ஓடிச்சென்ற பேருந்து வண்டியை கட்டிடப்பக்கமாக திருப்பி, அதில் இருந்து ஓர் ஏணியை வைத்தாவது மக்களை இறக்கலாமா என்று சிந்திக்காமல் கைத்தொலைபேசியில் படமெடுத்து உலகம் பூராவும் அனுப்பியதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் அங்கு நின்றவர்கள்.
இதுபோன்ற ஒட்டுண்ணி நகரங்களும், கட்டிடங்களும் இடிக்கப்பட்டு நகரங்கள் புதுமை பெறாவிட்டால் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு அது பெரும் பாதிப்பாக அமையும்.
இது குறித்த எந்த பிரக்ஞையும் இல்லாமல் இலங்கையில் வெளியான ஒரு செய்தி இப்படியுள்ளது.
—————
கட்டடத்தில் ஏற்பட்ட பாரிய புகை மண்டலத்தை கண்டதும் எப்படியாவது எனது மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணமே எனக்குத்தோன்றியது. பிள்ளைகளை ஜன்னல் வழியே வீசும்போது என்ன நடக்கும் என்பது பற்றி சிந்திக்கவில்லை.
காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இருந்தது. கீழே வந்து பார்த்தபோது அவர்கள் உயிருடன் இருப்பதை கண்டு எனது உயிர் திரும்பி ஆனந்தமடைந்தேன். கீழே அவர்களை காப்பாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
கண்டி, யட்டிநுவர நகரில் ஆறு மாடி கட்டடத்தில் நேற்று (08) காலை திடீரென ஏற்பட்ட தீயிலிருந்து தனது உயிரைக் காப்பாற்றிக்கொண்ட முப்பத்தாறு வயதான இராமராஜ் கண்டி பெரியாஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நிலையில் தான் முகம்கொடுத்த அந்த சூழ்லையை விளக்கும்போதே இவ்வாறுதெரிவித்தார். அங்கு தொடர்ந்து தெரிவித்த இராமராஜ்,
நானும் எனது மனைவியும் மூன்று பிள்ளைகளும் ஐந்தாவது மாடியில் வசித்து வந்தோம். என்னுடைய முச்சக்கரவண்டியை பாதைக்கருகில் நிறுத்தி இருந்தேன். அதிகாலை 6.20 மணியளவில் முச்சக்கர வண்டியை வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு நாங்கள் இருந்த அறைக்குத் திரும்பி வந்தேன். மாடிப்படியில் ஏறி வரும் போது நான்காவது மாடியில் அமைந்திருந்த அழகுநிலையத்தை உடைத்து யாரோ ஒருவர் பின்புறமாக திரும்பி நிற்பதைக் கண்டேன். நான் சத்தமிடாமல் சென்று தூங்கிக் கொண்டிருந்த மனைவியிடம் விடயத்தைக் கூறினேன்.
பின்னர் பக்கத்து கடையிலுள்ள அண்ணனுக்கு தொலைபேசி மூலம் விடயத்தைக் கூறினேன். அந்த நேரம் வெளியே ஏதோ சத்தம் கேட்டது. அத்துடன் புகையும் கிளம்பியதைக் கண்டேன். நான் வெளியே பார்க்கும் போது மாடியே தெரியாதவாறு புகையினால் நிரம்பியிருந்தது. மாடிப்படியும் தெரியவில்லை. மூச்செடுக்கவும் சிரமமாக இருந்தது. எனக்கு மனைவியையும் பிள்ளைகளையும் நினைத்து அச்சம் உருவானது. நான் ஜன்னலை திறந்து கீழே இருந்தவர்களிடம் உதவி கேட்டு கூச்சலிட்டேன்.
எனது ஊர் பண்டாரவளை, கண்டியில் வாடகைக்கே குடியிருக்கின்றோம். கண்டிக்கு வந்து ஒரு வருடமாகின்றது. நான் ஆபரணங்களுக்கு தங்கமூலாம் பூசும் தொழிலையே செய்கின்றேன். நான் முன்னர் இருந்தே அந்தத் தொழிலையே செய்து வருகின்றேன். புகை மண்டலம் அதிகரித்தபோது நான் உதவி கேட்டு சத்தமிட்டபடி வீட்டிலிருந்த படுக்கை விரிப்புகளை கீழே வீசினேன். எனக்கு எனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே இருந்தது.
முதலில் மூன்று வயதான கடைசி மகனை கீழே வீசினேன். அதன்பின்னர் ஆறு வயதான இரண்டாவது மகனை ஜன்னலூடாக வெளியே வீசினேன். பின்னர் மூத்த மகனையும் வெளியே வீசினேன். இவருக்கு பத்து வயது. அவர்களுக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. பின்னர் எப்படியாவது எனது மனைவியை கீழே வீச வேண்டும். அவர் கீழே பாய்வதற்கு பயப்பட்டார். நான் கீழே இருந்த ஜன்னலை உடைத்து அவருக்கு வெளியே வர வழிசெய்தேன். அவர் ஜன்னலால் கிழே விழுந்தார்.
நான் ஒரு கையால் அவரைப் பிடித்துக் கொண்டேன். பின்னர் அவரும் கீழே விழுந்தார். நான் சிறுது தூரம் கீழே வந்து குதித்தேன். எனது மனைவியும் பிள்ளைகளும் ஆபத்தில்லாமல் இருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எனது குடும்பத்தை கீழே இருந்தவர்கள் உதவி செய்ததால்தான் காப்பாற்ற முடிந்தது. அவர்களுக்கு மிக்க நன்றி.
அவர்கள் கண்டி பெரியாஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். அவர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் விரைவில் வீடு திரும்புவார்கள். என கண்டி பெரியாஸ்பத்திரி பணிப்பாளர் சமன் ரத்நாயக்க என்னிடம்தெரிவித்தார் என்றும் இராமநாதன் தெரிவித்தார்.