கனா’ வெற்றி விழாவில் பேசிய தனது பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து, மன்னிப்பு கோரியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமான படம் ‘கனா’. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், இளவரசு, ரமா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. அந்த விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் போது, “இப்போது எல்லாம் வெற்றி பெறாத படத்துக்குக் கூட வெற்றி விழா கொண்டாடுறாங்க” என்று குறிப்பிட்டார்.
உடனே சிவகார்த்திகேயன் எழுந்து கிண்டலாக கொஞ்சம் கீழே வந்துடுங்க என்றார். அதனைத் தொடர்ந்து சத்யராஜ் பேசினார். அப்போது, “இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் யாருக்கெல்லாம் நன்றி சொன்னாங்களோ, அதை அப்படியே ஆமோதிக்கிறேன். அவர் இறுதியாக பேசியதைத் தவிர” என்று பேசினார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியது தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில், “’கனா’ வெற்றி விழாவில் நான் பேசியது விளையாட்டுக்காகத்தான். நான் எந்தப் படத்தையும் குறிப்பிட்டுப் பேசவில்லை. நான் எப்போதும் யாரையும் காயப்படுத்தியதில்லை.
எல்லா படங்களும் வெற்றியடைவே பிரார்த்திக்கிறேன். ஒரு படத்தை உருவாக்கி வெற்றியடையச் செய்வது எவ்வளவு கடினம் என்பதை நான் உணர்வேன். நான் பேசியது யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.” என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஐஸ்வர்யா ராஜேஷின் ட்வீட்டைத் தொடர்ந்து, இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.