மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பாக பிரதமர் தலைமையிலான மீளாய்வு குழு அமைக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதும் இன்னும் அந்த குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.இந்த விடயம் தொடர்பான சபாநாயகர் விரைவில் நடவடிக்கையெடுக்க வேண்டுமென எதிர்க்கட்சியினர் சபையில் கோரிக்கை விடுத்தனர்.
பாராளுமன்றத்தில் இன்று ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பியே அவர்கள் இவ்வாறாக கோரிக்கை விடுத்தனர். அதன்போது தனது கருத்தை முன்வைத்த எதிர்க்கட்சி எம்.பியான தினேஸ் குணவர்தன தெரிவிக்கையில்,
மாகாண சபை தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு அது பாராளுமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பிரதமர் தலைமையில் எல்லை நிர்ணயம் தொடர்பான மீளாய்வு குழுவொன்று அமைக்கப்பட்டு அதற்கு இரண்டு மாத காலம் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி அந்த குழுவினால் இரண்டு மாதத்திற்குள் அது தொடர்பான அறிக்கையை சபாநாயகருக்கு சமர்ப்பித்து அவரினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் தற்போது இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதும் அந்த அறிக்கை இன்னும் அனுப்பி வைக்கப்படவில்லை. இது தொடர்பாக சபாநாயகர் நடவடிக்கையெடுக்க வேண்டும்.