கமல் திரைப்படம் எடுக்கப் போவதாக கனவு காண முன்னரே வழக்கு போடுவதாக செய்தி வருவது போல தமிழகத்தில் திரை வியாபாரத்திற்காக அரசியல், பஞ்ச் டயலக் என்று ஏகப்பட்ட கூத்துக்கள் அரங்கேறியுள்ளன.
இந்த நிலையில் பேட்ட – விஸ்வாசம் மோதல் வெடித்துள்ளது.
தமிழக இளைஞர்களின் பரிதாப நிலை போயும் போயும் இரண்டு நடிகர்களுக்காக மோதல்..
தமிழகத்தை சேராத இரண்டு நடிகர்களின் படத்திற்காக தமிழக இளைஞர்கள் மோதலில் இறங்கியுள்ளதாக பலர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது திரைப்படத்தை விற்க உருவாக்கப்பட்ட போலி நாடகமா இல்லை உண்மையா தெரியவில்லை.
திரையரங்கிற்கு ஆட்களை வரவழைத்து பணத்தை சுருட்ட நடக்கும் நாடகமா இல்லையா என்பதை எப்படி கண்டு பிடிப்பது.
எல்லோருமே மௌனம் காப்பதால் இது எழுதப்பட்ட திரைக்கதையாகவும் இருக்கலாம். இதுகுறித்த செய்தி இப்படியுள்ளது. :
நடிகர் ரஜினி குறித்து அஜித் ரசிகர் ஒருவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் கண்டத்துக்கு உள்ளாகியுள்ளது.
சினிமாவைப் பொழுதுபோக்காக அணுகாமல் தனது அபிமான நடிகரை மட்டும் புகழ்ந்து, பிற நடிகர்களையும், அவர்களது ரசிகர்களையும் விமர்சிப்பது என்ற நிலை மாறி அவர்களைப் பொதுவெளியிலும், சமூக வலைதளங்களிலும் தகாத வார்த்தைகளில் விமர்சிப்பது சமீப நாட்களில் அதிகரித்து வருகிறது.
ரசிகர்கள் வன்மம் நிறைந்த தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும் தங்களது சேனல் விளம்பரத்துக்காக அத்தகைய ரசிகர்களிடம் பேட்டி கண்டு தங்கள் யூடியூப் சேனல்களில் பதிவிட்டு ஆரோக்கியமற்ற போக்கை சில யூடியூப் சினிமா சேனல்கள் தொடர்கின்றன.
பொங்கலுக்கு ரஜினியின் ‘பேட்ட’ மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளன. இந்த நிலையில் டிக்கெட் விற்பனை சூடு பிடித்து வருகிறது. டிக்கெட் எடுத்து வரும் ரசிகர்களிடம் யூடியூப் தளங்கள் பேட்டியும் எடுக்கின்றன.
அஜித் ரசிகர் ஒருவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த வீடியோ ஒன்றில் நடிகர் ரஜினி, மற்றும் அவரது ‘பேட்ட’ படத்தையும், விஜய் மற்றும் அவர்து ரசிகர்களையும் முகம் சுளிக்கும் வகையில் விமர்சித்துள்ளார்.
அதில், ”அஜித் குமாருக்கு யார் போட்டியாக வர முடியும். 30 வருடம் அஜித் குமாருக்காக இருக்கோம். இந்த இதயத்தை அவருக்காக அறுத்துக் கொடுப்பேன். அவர் மட்டும்தான்..ரஜினிக்குச் சொல்கிறேன் அவருக்கு வயதாகிவிட்டது. மனிதக் கடவுள் அஜித் குமார் வாழ்க…” என்று கூறி ரஜினியை இங்கு பதிவு செய்ய முடியாத வார்த்தைகளில் திட்டி விஜய்யையும் விமர்சிக்கிறார்.
இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டதன் மூலம் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அதுமட்டுமல்லாது ‘பேட்ட’ திரையரங்குகளில் கூடும் ரசிகர்கள் கூட்டத்தை ‘விஸ்வாசம்’ திரைப்படம் கூட்டம் என்று போட்டோஷாப் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக ரஜினி ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சமூக வலைதளங்களை தவறாகப் பயன்படுத்தும் ரசிக பக்கங்கள்
தற்போது படங்களை இளைய தலைமுறையிடமும், பொதுமக்களிடம் கொண்டு செல்லும் விளம்பரத் தளமாக சமூக வலைதளங்கள் மாறிவிட்டன.
அவ்வாறு இருக்கையில் சில பொய்யான தகவல்களையும், தங்களுக்குப் பிடிக்காத நடிகர்கள் குறித்தும் அவர்களது படங்கள் குறித்தும், பட வசூல் குறித்த தவறான தகவலையும் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட ட்விட்டர் கணக்குகள் செயல்பட்டு வருகின்றன.
குறிப்பாக அஜித் ரசிகர் அக்கவுண்ட் (இவர்களுக்கு ஒரு லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர்) என்ற பெயரில் Trollywood ™ , Kokki Kumaru 😉 ஆகிய பக்கங்கள் பெருமளவு இம்மாதிரியான செயலில் ஈடுபட்டு வருகின்றன.
இவர்களுக்கு எதிர்வினை ஆற்றுவதற்காக பிற நடிகர்களின் ரசிகர்களும் இம்மாதிரியான வன்மம் நிறைந்த பக்கத்தை உருவாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.