டென்மார்க்கில் இருந்து குடியுரிமை பறிக்கப்பட்டு, மொறோக்கோ நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர் செயட் மன்சூர் சிறையில்தள்ளப்பட்டுள்ளார்.
முன்னைய செய்திகள் விசாரணைகளின் பின்னதாக அவர் நடமாட அனுமதிக்கப்படுவார் என்று கூறியிருந்தன. ஆனால் பிந்தி வந்த செய்திகளோ அவர் விடுதலையாகமாட்டார் சிறையில் தள்ளப்பட்டார் என்கின்றன.
அவருடைய சட்டத்தரணி மொறோக்கோவில் இதுதான் நடக்கும், திருப்பி அனுப்பப்படுவோருக்கு அங்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியிருந்தார். அதுபோல மனித உரிமை அமைப்புக்களும் கூறியிருந்தன.
இப்போது மொறோக்கோ அரசு அவர்கள் சொன்னபடிதான் நடந்துள்ளது..
ஆனால்…
செயட் மன்சூர் விடுதலை செய்யப்படக்கூடிய ஒருவராக காணப்படவில்லை அவர் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை பார்த்தால்.
முதலாவது குற்றம் 2003 ம் ஆண்டு மொறோக்கோவில் உள்ள கஸாபிளாங்காவில் ஒரு தற்கொலைக் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 41 பேர் கொல்லப்பட்டு, நூற்றுக்கணக்கானவர் படுகாயமடைந்திருந்தனர்.
இந்த மோசமான குற்றச் செயலுடன் செயட் மன்சூருக்கும் தொடர்பிருப்பதாக மொறோக்கோ சந்தேகிக்கிறது. மேலும் குற்றம் உறுதி செய்யப்பட்டால் 30 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது.
இத்தகைய ஒருவரை நடமாடவிடவில்லை என்று எப்படி வாதிடுவது..?
மொறோக்கோ நாட்டில் 80 களுக்கு முன்னர் மரணதண்டனை அமலில் இருந்தது இப்போது இல்லை என்கிறார்கள். ஆகவே ஒரு வேளை உண்மையாகவே குற்றமிழைத்திருந்தாலும் தூக்குத் தண்டனையில் இருந்து தப்ப வாய்ப்புள்ளது. இருப்பினும் மொறோக்கோ ஓர் ஒழுங்கான நாடல்ல என்பது உலகறிந்த இரகசியம்.
செயட் மன்சூர் முன்னர் இங்கிலாந்து சென்று கடும்போக்கு இஸ்லாமிய தீவிரவாதி ஒருவரை ( இரட்டைக் கோபுர தாக்குதலுடன் தொடர்புடைய கண்தெரியாத இஸ்லாமிய தீவிரவாதி) டென்மார்க் கொண்டுவர முயன்றதாக கூறப்படுகிறது.
மேலும் டென்மார்க்கில் அல்குவைடா பயங்கரவாத காணொளிகளை இவர் வழங்கியிருக்கிறார். நீதிக்கு புகழ் பெற்ற டென்மார்க் நீதிமன்றே குடியுரிமையை பறித்து நாடுகடத்தும் நிலைக்கு போயிருக்கிறது என்றால் இவர் சுற்றவாளி என்று வாதிடக்கூடிய வலு குன்றுகிறது.
எல்லாவற்றிலும் மேலாக டேனிஸ் ஸ்ரேற் மினிஸ்டரே டேனிஸ் சமூகத்தில் வாழ செய்யட் மன்சூர் தகுதியுடைய ஒருவரல்ல என்று கூறியிருக்கிறார்.
ஆகவே செயட் மன்சூர் விவகாரம் சாதாரணமான ஒன்று போல தெரியவில்லை..
நிமிடத்திற்கு நிமிடம் காட்சி மாறுகிறது.
அலைகள் 10.01.2019 வியாழன்