டென்மார்க் பாராளுமன்றத்தில் தமிழர் திருநாள்

தமிழர் வாழ்வில் தொன்று தொட்டு தொடர்ந்து வரும் பண்பாட்டு சிறப்பான தைப்பொங்கல் திருநாளானது எமது பண்பாட்டில் தொடர்ச்சியாக பேணப்பட வேண்டிய தமிழின அடையாள மரபுகளில் ஒன்று, ஆகையால் அது தமிழர் திருநாளாக அடையாளப்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகின்றது.

அதற்கமையவே தமிழின அடையாள மரபை வெளிப்படுத்தும் வகையில் புலம் பெயர்ந்து நாம் வாழும் டென்மார்க் நாட்டில் டெனிஸ் மக்களுடனான இணைவாக்க அடிப்படையில் பண்பாட்டு பரிமாற்றலை முன்நிறுத்தி டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் பாராளுமன்றத்தில் வரும் 14.01.2019 திங்கள் அன்று தமிழர் திருநாள் கொண்டாடப்பட இருக்கின்றது.

கொண்டாடப்பட இருக்கும் தமிழர் திருநாள் எமக்கான சில விடயங்களையும் தாங்கி நிற்கின்றது. அதாவது ஈழத்தில் எமது மொழி, கலை, கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களை சிதைப்பதுடன் எமது நிலத்தையும் அபகரிப்பு செய்து கட்டமைக்கப்பட்ட ஒரு தொடர் இன அழிப்பை சிங்களம் பலமுனைகளில் மேற்கொண்டு வருகின்றது. ஆகையால் புலம் பெயர் மண்ணில் வாழும் நாம் எமது பண்பாட்டு அடையாளங்களை தக்க வைப்பதும் எதிர்கால சந்ததிக்கு கடத்துதலும் காலத்தின் தேவை.

எமக்கே உரித்தான தொன்மையான பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றான தைப்பொங்கல் திருநாளாகிய தமிழர் திருநாள் டென்மார்க் பாராளுமன்றத்தில் கொண்டாடப்படுவதற்கு உதவி நல்கிய டெனிஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவர்க்கும் நன்றிகள் உரித்தாகுக!

குறிப்பு:
தைப்பொங்கல் திருநாளே தமிழர் திருநாளாகவும் கொண்டாடப்படும் அதேவேளை 1921 ஆம் ஆண்டு தமிழறிஞர்களால் தமிழர்களுக்கான தொடராண்டு திருவள்ளுவர் ஆண்டாக அறிமுகம் செய்யப்பட்டது. இவ் தொடராண்டின் தொடக்க மாதமாக தமிழர்வாழ்வில் தொன்று தொட்டு தொடர்ந்து வரும் பண்பாட்டு மாதமாகிய தை மாதமே முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது தமிழீழ நடைமுறை அரசில் அங்கிகரிக்கப்பட்டு முன்னுரிமையும் கொடுக்கப்பட்டது.

“தை பிறந்தால் வழி பிறக்கும் “
என்ற தமிழ் முதுமொழிக்கேற்ப நம்பிக்கையுடன் வருங்காலத்தை எதிர் கொள்வோம்.

நன்றி
டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்
டென்மார்க்

Related posts