அனுராதபுரம் விவேகானந்தா சபைக்குரிய காணியினை அடாத்தான முறையில் சிலர் அபகரித்துள்ளதாகவும், அனுராதபுரத்தில் உள்ள கதிரேசன் ஆலய காணியையும் அபகரிக்க முயற்சி செய்வதாகவும் அனுராதபுரம் விவேகானந்தா சபையின் தலைவரும், கதிரேசன் ஆலயத்தின் பிரதமகுருவுமாகிய பி. ஞானசந்திரன் குருக்கள் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இந்து சமய மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அங்கு வாழும் தமிழ், சிங்கள மக்கள் கதிரேசன் ஆலய பிரதம குரு தலைமையில் வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் இன்று(13) நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
1985ம்ஆண்டு நடைபெற்ற வன்செயல்களின் பின்னர் 2000ஆம் ஆண்டு செயலிழந்து இருந்த விவேகானந்தா சபையை அனுராதபுரத்தில் மீண்டும் நாம் ஆரம்பித்திருந்தோம். அந்தவகையில் அனுராதபுரம் விவேகானந்தா சபைக்கு ஒதுகுக்கப்பட்ட காணியை சண்முகம் சிவஞானம் என்பவர் சட்டவிரோதமான முறையில் அரச அதிகாரிகளை பிழையாக வழிநடத்தி, காணிக்கான அனுமதி பத்திரத்தை பெற்றுள்ளார்.
குறித்த காணியானது 2006ஆம் ஆண்டளவில் சண்முகம் சிவஞானம் என்பவருக்கு காஸ் வியாபாரம் நடாத்துவதற்காக உடன்படிக்கை செய்யபட்டு விவேகானந்த சபையால் வழங்கப்பட்டிருந்தது. எனினும் 2011ஆம் ஆண்டு குறித்த காணியினை போலியான முறையில் தனக்கு சொந்தமாக்கி நீண்டகால அனுமதி பத்திரத்தை அவர் பெற்றுள்ளார்.
குறித்த காணிக்கு அவர் அனுமதிபத்திரம் பெற்றுள்ளார் என்றவிடயம் 2016ஆம் ஆண்டே எமக்கு தெரியவந்தது. குறித்த விடயம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் நாம் விண்ணபித்து பல விடயங்களை அறிந்த போது போலியான தகவல்கள் மூலம் அரச அதிகாரிகளை ஏமாற்றி, இலஞ்ச ஊழல் மூலம் காணிக்கான அனுமதி பாத்திரத்தை அவர் பெற்றுக்கொண்டுள்ளார் என்பதை தெரிந்து கொண்டோம்.
இது தொடர்பாக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். கடந்த வருடம் சபையின் மிகுதிக் காணியையும் தனக்கு சொந்தமாக்கி கொள்வதற்காக முயற்சிகளை அவர் மேற்கொண்ட போதும் நீதிமன்றில் வழக்கிருப்பதால் அது முடியாமல் போனது. குறித்த நபர் யாழ்பாணம் காரைநகரை சேர்ந்தவர். யாழ், வவுனியா, அனுராதபுரம், கொழும்பு போன்ற பகுதிகளில் பல வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். பல கோவில்களையும் கட்டியிருக்கிறார். பெரும் கொடையாளி என்று அறியபடுபவர். எனினும் ஒரு இந்துவாக இருந்து கொண்டு விவேகானந்தா சபைக்குரிய அனைத்து காணிகளையும் தனக்கு சொந்தமாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
இவரால் அபகரிக்கபட்ட காணியில் அசைவ உணவகம் ஒன்று நடத்தபட்டு வருகிறது. இது எமது சமயத்திற்கு ஒவ்வாத நடவடிக்கையாகவே உள்ளது. இதேவேளை, அனுராதபுரம், கதிரேசன் கோவிலின் ஒரு ஏக்கர் காணியும், அருகாமையில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள காணியினையும் சொந்தமாக்கி கொள்வதற்கு வேறு இருவர் முயன்று வருகின்றார்கள்.
ஏற்கனவே அனுராதபுரத்தில் இந்து மக்களின் தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளால் மீதி இருக்கும் சொற்ப மக்களின் தொகையிலும் மாற்றம் ஏற்பட்டுவிடும். அத்தோடு பொதுமக்களது சொத்தை தனி நபர்களின் தேவைக்காக அரச அதிகாரிகள், ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள் போன்றோர் இலஞ்சம்பெற்றுக்கொண்டு மாற்றி வழங்கியிருப்பது வெட்கக்கேடான விடயமாகவே உள்ளது. இது இந்தநல்லாட்சியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது.
எனவே விவேகானந்தா சபைக்கு சொந்தமான காணியினை மீட்டுத்தருவதுடன், இதில்ஈடுபட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகளை வெளிப்படுத்தி உரியநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உரியதரப்புகளை கேட்டுகொள்கின்றோம் என்றார்.
அத்துடன், குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சிதலைவர், காணிஅமைச்சர், இந்துவிவகார அமைச்சர் என 13 திணைக்களங்களிற்கு மகஜரும் அனுப்பி வைக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.