முன்னொரு காலத்திலே ரஜினியின் படையப்பாவும் அஜித்தின் வாலியும் ஒன்றாக வெளியாகி இரண்டும் வெற்றிபெற்றன. அதுபோல இரண்டு படங்களும் வெல்லும் என்ற அடிப்படையில் வெளியானவைதான் பேட்ட – விஸ்வாசம்.
பேட்ட ஒரு தரம் பார்க்கலாம்.. விஸ்வசம் பிள்ளை வளர்ப்பில் வரும் பிற்பகுதி கருத்தில் மயங்கி நல்ல படமென சிலர் முடிவு செய்யலாம். ஆனால் தங்கல், உள்ளிட பல படங்களில் வந்த கதைதான் அதன் பிற்பகுதி. அவைகளை பார்க்காவிட்டால் விஸ்வாசம் நல்லபடம் போல தெரியும்.
பேட்ட படத்தின் தவறு ரஜினி ஆட்களை நூற்றுக்கணக்கில் சுட்டுக் கொன்றும், வெடி குண்டு வைத்து வில்லன் படுகொலைகளை செய்தும் போலீஸ் இல்லாத பொட்டல் வெளியாக இருக்கிறது கதை.
விளையாட்டு துப்பாக்கிகள் தெளிவாக தெரிகிறது.. பிள்ளைகள் பராமரிப்பு நிலையங்களில் தண்ணீர் துப்பாக்கியை வைத்து விளையாடும் பிள்ளைகள் விளையாட்டுத்தான் பேட்ட. ஆனாலும் ஒரு தடவை பார்க்கலாம்.
இதையெல்லாம் மறந்தவிட்டு, ஒரு கார்டுன் சித்திரத்தை பார்ப்பது போல பார்த்தால் சரி.
விஸ்வாசம் இடைவேளைக்கு முன் அஜித், நயன்தாரா இருவரையும் சேர்ப்பதற்கும் இடைவேளையின் பின் பிரிந்த இருவரை சேர்ப்பபதற்கும் இயக்குநர் படும்பாடுதான் விஸ்வாசம். இங்கும் கொலைகள் அதிகம் போலீஸ் இல்லை.
இடைவேளைக்கு பின்னர் ஏற்கெனவே பல படங்களில் வந்த கதையை மறுபடியும் பார்க்கிறோம் அவ்வளவுதான். எப்படா முடியுமென பார்த்து காத்திருக்கிறோம் ஒருவாறு முடிகிறது.
ஆனால் இரு படங்களையும் நல்லதென பலர் எழுதுகிறார்கள், அதற்குக் காரணம் உண்டு. அவரவர் காலத்தில் வரும் படங்களை வைத்துத்தான் அவர்கள் சுவைத்தலின் ஆழம் இருக்கும். ஆகவே அதில் தவறில்லை.
நல்ல படைப்பிலக்கியங்களை வாசித்து, அதன் பின் இந்த இருபடங்களையும் ஒப்பிட்டால்.. இரண்டு இயக்குநர்களும் ரமணிச்சந்திரனும், ராஜேஸ்குமாரும் எழுதும் தொடர்நாடக கதைகளுக்கு மேல் போக சரக்கு இல்லாதவர்கள் என்பதை கண்டறியலாம்.
ரஜினி உடலில் ஜாக்கட் போட்டு மெலிந்த உடம்பை மறைத்து புகை அடித்து, பின்புறம் லைட் போட்டு வயோதிபத்தையும் இயலாமையையும் மறைக்கும் கமேராமேன் நிறைய பாடுபட்டுள்ளார், அவர்பட்ட கஷ்டம்தான் பேட்ட..
விஸ்வாசத்தில் வர்ணங்களை வைத்து அழகாக தொடர் நாடகங்கள் போல கலர் கலராக காட்சிகளை தந்துள்ளார்கள், தொடர்நாடகங்களில் பார்த்த தமிழகத்தை திரையில் பார்க்கிறோம்.
பல்லில்லாத அப்பாத்தாக்களின் அலப்பாரைகள் தாங்க முடியவில்லை. இரண்டு படங்களிலும் பாடல்கள் இருக்கிறதா என்றுதான் கேட்க வேண்டும். நல்லவேளை பேட்டவில் அனிருத்தை அறிந்து பழைய பாடல்களின் துண்டுகளை போட்டு சமாளித்துவிட்டார்கள்.
அவர்கள் இப்போது வியாபாரம் நடக்கும் அனைவரும் சரக்கு தீர்ந்தவர்கள் என்பதை விளங்கி படம் எடுத்ததே வெற்றி.
பொங்கல் பண்டிகைக்கு இரண்டு படங்களும் பட்டாசு வெடி சுடுகின்றன. பட்டாசு சுடும் பணத்தில் திரையரங்கு வந்து பாருங்கள் என்று வெடி சுட்டுக்காட்டியுள்ளன.
பேட்ட பார்த்தவன் மேலும் பத்து வருடங்கள் பட்டாசு சுடவேமாட்டான்.
படங்கள் இரண்டின் வசூலும் மகிழ்ச்சியாக இல்லை என்ற செய்தியை அடுத்த மாதம் எதிர்பார்க்கலாம்.
வரும் நாட்களில் 100 கோடி வசூல் செய்தி வரப்போகிறது. இப்போது 1000 கோடி 2.0 எங்கே என்பதை மறந்த ரசிகர் இவைகளையும் அடுத்த வாரம் மறந்துவிடுவார்கள்.
ஆனால்..
ரஜினியும் அஜித்தும் கேட்கும் சம்பளத்திற்கு 25 வீதம் கீழேதான் இருவருடைய வர்த்தகங்களும் உள்ளதை ஒப்புக்கொண்டு சம்பளத்தை பாதியாக குறைக்காவிட்டால் இருவருடைய படங்களும் நஷ்டமாகவே அமையும்.
அதற்கு இந்த படங்களே உதாரணம்.
இருப்பினும் ஆலையில்லாத ஊருக்கு இருப்பைப்பூ சர்க்கரை என்றால் எதிர்க்கவா முடியும்.
ஆனால் இரண்டு படங்களும் பார்ப்போருக்கு மகிழ்வு கொடுத்தால் அதை வரவேற்கத்தான் வேண்டும் என்பதையும், அதற்காக ஒரு தடவை பார்க்கலாம் என்பதையும் மறுத்தென்ன பயன்..?
மேலும் படக்குழு பட்ட பாடுகளை மட்டும் மதித்து “ஒரு தடவை ஒரேஒரு தடவை மட்டும்” பார்க்கலாம்.
அலைகள் 13.01.2019