முதலில் டென்மார்க் தலைநகரில் நடக்கும் பொங்கல் பண்டிகை சிறப்போடு நடக்க வாழ்த்துவோம்.
டென்மார்க் பாராளுமன்றத்தில் டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தால் நடத்தப்படும் பொங்கல் திருநாள் நிகழ்வு டென்மார்க் வாழ் தமிழ் மக்களின் கவனத்தைத் தொட்டுள்ளது.
டேனிஸ் மக்களிடையேயும் இதுபோல அறுவடைத் திருநாள் கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் வாழ்ந்த நிலங்களில் உள்ள அறுவடைக்காலமாக தைமாதம் புகழ் பெற்றதுபோல டேனிஸ் காலநிலைக்கு ஏற்ப டென்மார்க்கில் அறுவடைத் திருநாள் நடக்கிறது.
அந்த வகையில் தமிழர்களின் வாழ்வின் அடிப்படையே நன்றி கூறுவதுதான் என்பதை பறைசாற்றும் பொங்கல் பண்டிகையின் மகத்துவத்தை டேனிஸ் மக்களும் புரிந்து கொள்ள டேனிஸ் பாராளுமன்றத்திற்கு இந்த விழாவை கொண்டு செல்வது நல்லதோர் முயற்சியாகும்.
பொங்கல் பண்டிகையின் மகத்துவத்தை அறிந்து சிறீலங்கா பாராளுமன்றமும் கடந்த சில காலமாக அரசியல் ஸ்டன்டுக்காக பொங்குவது வழமையாக இருக்கிறது. ஆனால் அதனுடன் ஒப்பிட்டால் இது வேறுபடுகிறது.
அறுவடைக்கு காரணமான சூரியனுக்கு நன்றி..
வயலில் உழைத்த மாட்டுக்கு நன்றி ..! என்று சூரியன் முதல் மாடுவரை நன்றி தெரிவுக்கும் ஒரு விழாவாக இது இருப்பதை டேனிஸ் மக்கள் உணர்ந்தால் அது தமிழரை, அவர்தம் கலாச்சாரத்தை அறிய அது பெரும் உதவியாக அமையும்.
தமிழ் மக்களின் கலாச்சார பெருமையையும் அவர்களின் உழைக்கும் ஆற்றல் எங்கிருந்து வருகிறது என்ற கரு நிலை உண்மையையும், இன்று டென்மார்க்கில் தமிழர்கள் பெற்றுள்ள உழைக்கும் ஆற்றலையும் டேனிஸ் மக்கள் அறிய, புரிய அது உதவியாக அமையுமன்றோ..?
கலாச்சாரம் என்பது இருபக்க வர்த்தகம் போன்றதாகும்..
எனவேதான் இந்த நேரம் தமிழ் மக்களும் டேனிஸ் கலாச்சாரத்தை புரிய ஒரு வழி பிறக்கும் என்பதையும் மறக்க முடியாது. காரணம் சிறிய உதவியானாலும் அது தினையளவு உதவியானாலும் அதை பனையளவாக கொள்ளுங்கள் என்று வள்ளுவர் கூறுவதை சரியாக கடைப்பிடிக்கும் இனம் டேனிஸ் இனம்தான்.
அவர்கள் உடனடியாக நன்றி கூறுவார்கள்..
ஆனால் தமிழர்கள் சிறப்பாக ஈழத்தமிழரில் சிலர் யாராவது நன்றி சொன்னால் ஏன் நன்றி கூறி எமக்குள் பிரிவை ஏற்படுத்துகிறீர்கள் என்று கோபமடைந்து, நன்றி கூற வேண்டாம் என்பார்கள்.
அவர்கள் உணர்வை நாம் மதிக்கிறோம் ஆனாலும் ஓர் இயற்கை விதி உள்ளது அதை நாம் மதிக்காவிட்டால் நாம் தோற்றுவிடுவோம்.
கடமையைத்தானே செய்கிறோம் நன்றி கூறி எம்மை பிரிக்காதீர்கள் என்று சூரியனும் மாடும் சொன்னால் நாம் என்ன செய்வதென ஒரு கணம் சிந்தித்தால் நலம் பிறக்குமன்றோ..?
நமக்கு நன்றி கூற வேண்டாமென தெரிவித்து சூரியனுக்கு நன்றி கூறுவது சூரியனை அன்னியப்படுத்திவிடுமன்றோ ? இது ஒரு விவாதப் பொருள்.
இதை அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்.. அவ்வளவு மட்டுமே.. யாரையும் குறைகூறுவதாக இது அமையாது. (ஓர் அன்பு விளக்கம் மட்டுமே.)
ஏனென்றால் நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் என்ற தமிழ் பாடல் தமிழரில் பலரால் புரியப்படுவதில்லை. நன்றி கூறுவது நல்லொழுக்கத்தின் அடையாளமும், அடிப்படையுமாகும். நன்றி கூறாத இனங்கள் தோல்வியை பரிசாக பெறும் என்பதை டென்மார்க் முதல் அமெரிக்காவரை மேலை நாடுகள் உறுதியாக நம்புகின்றன.
அமெரிக்க அதிபரின் அரசு முறை உரையில் எப்போதும் கடவுளுக்கு நன்றி என்ற வரி இருக்கும்.
ஆகவே நாமும் நன்றி கூற வேண்டும்.
ஏன் என்று கேட்கிறீர்களா..?
நன்றி கூறி எமக்குள் உள்ள உறவை பிரிக்கிறீர்கள் என்று சூரியனும் மாடும் சொன்னால் பொங்கலே இல்லாது போகிறதன்றோ..?
ஆகவே நாமும் நன்றி கூற வேண்டும்.
அலைகள் 14.01.2019 திங்கள்