வடக்கிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் 2020/21ஆம் ஆண்டளவில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50வீதமாக அதிகரிப்பதற்கு தாம் எதிர்பார்ப்பதாக வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களின் தனிப்பெரும் பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகை ஆளுநர் கலாநிதிசுரேன் ராகவன் தலைமையில் இன்று (15) முற்பகல் வடக்கு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
வடக்கு ஆளுநர் செயலகத்தின் பணிக்குழாமினருடன் பொங்கல் பொங்கி சம்பிரதாயபூர்வமாக தைப்பொங்கல் பண்டிகையினைக் கொண்டாடினார்.
இதன்போது பணிக்குழாமினரிடம் கருத்துத் தெரிவித்த ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வடக்கு மாகாணத்தில் ஆசிரியர்களாகவும் தாதியர்களாகவுமே பெண்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர். அந்த நிலைமையினை மாற்றி 2020/21ஆம் ஆண்டளவில் வடக்கிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50வீதமாக அதிகரிப்பதற்கு தாம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டதோடு அதற்கான நடவடிக்கைகளை உடனடியாகவே ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் உள்ளிட்ட ஆளுநர் செயலகத்தின் பணிக்குழாமினர் இந்த பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை தைப்பொங்கலை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் வருடந்தோறும் ஏற்பாடு செய்யும் கலாசார பவனியையும் ஆளுநர் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு