இரு சகோதரர்கள் ஜனாதிபதித் தேர்தலில் குதிக்க விருப்பம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தன்னை வேட்பாளராக கட்சி கருதுமேயானால் தான் போட்டியிட விரும்புவதாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் சமல் ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதையடுத்து தினகரன் அவரிடம் கேட்ட போது, மக்கள் தயாராக இருந்தால், தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக கூறினார்.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தான் தயாராக இருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் கூறியிருக்கிறார். ராஜபக்ஷ குடும்பத்தில் இருந்து இரண்டு சகோதரர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதையடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது பதவியை முதலாவது முறையாக முடித்துக் கொண்டதையடுத்து 2020 ஜனவரி 7ம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை வியத்மக தொழில்சார் அமைப்பின் கூட்டமொன்றில் வைத்துதான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கூறியிருந்தார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் மேற்படி அறிவிப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான குமார வெல்கம மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதேநேரம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோதாபய ராஜபக்ஷ போட்டியிடுவதாக சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

கோதாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜாவுரிமை மற்றும் சி.ஐ.டி. மோசடி குற்றச்சாட்டு விசாரணை திணைக்களம், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகியவை முன்னிலையில் மிக் விவகாரம், லசந்த விக்ரமதுங்க கொலை, கீத் நொய்யார் கடத்தல் மற்றும் அவான் கார்ட் விவகாரம் ஆகிய விடயங்களில் அவரது பங்கு ஆகிய சர்ச்சைகளுக்கிடையே அவர் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியில் தமது கட்சியின் வேட்பாளராக கிரிமினல் குற்றச் செயல்களுடன் சம்பந்தப்படாத ஒருவரையே தெரிவு செய்யுமாறு பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சியின் தலைவர்களான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பஷில் ராஜபக்ஷவே பொதுஜன பெரமுன கட்சியை உருவாக்கியவர் என்றும் தாமரை மொட்டு சின்னத்தை கட்சிக்கு சூட்டியவரான பஷில் ராஜபக்ஷவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் வேட்பராள தகுதியானவர் என்று பொதுஜன பெரமுன கட்சியில் பஷிலுக்கு ஆதரவான தரப்பினர் கூறி வருகின்றனர்.

எனினும் பஷில் ராஷபக்ஷவும் நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ள இரண்டு வழக்குகளில் சந்தேக நபராக கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts