சமஷ்டிக்கான வழியை அமைத்துக்கொள்ளும் நடவடிக்கையாகவே அரசியலமைப்பு தொடர்பான ஆலோசனை அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதனை எதிர்க்காவிட்டால் அதுவே சட்டமூலமாக எதிர்காலத்தில் வரும். அத்துடன் இதனை எதிர்க்கும் மகாநாயக்க தேரர்களையும் அரசாங்கம் ஆள்விட்டு எச்சரிக்க ஆரம்பித்துள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணி, பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சி காரியாலயத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே விமல் வீரவன்ச இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், உத்தேச அரசியலமைப்பு தொடர்பான வரைபைக்கூட இதுவரை தயாரிக்கவில்லை என பிரதமர் கொழும்பில் தெரிவிக்கின்றார்.
ஆனால் அரசியலமைப்பு சட்டமூலமே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தெரிவிக்கின்றார்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அளித்திருக்கும் வாக்குறுதிக்கமைய வடக்குக்கு சமஷ்டியை பெற்றுக்கொடுப்பதற்கான வழியை அமைத்துக்கொள்ளும் நோக்கிலே அரசியலமைப்பு தொடர்பான ஆலோசனை அறிக்கை என தெரிவித்து பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது.