எம்ஜிஆரின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு, உயர் நீதிமன்ற உத்தரவின்படி எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு, விழா ஏதுமின்றி திறக்கப்பட்டது.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நூற்றாண்டு நினைவு வளைவு ரூ.2.52 கோடி செலவில் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், வழக்கறிஞர் தினேஷ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவரது கோரிக்கையில் எம்ஜிஆர் நினைவு வளைவு தேசிய நெடுஞ்சாலை விதிகளுக்கு மாறாகவும், மாநில சட்ட விதிகளுக்கு மாறாகவும் அமைக்கப்படுவதாகவும், இது பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையை மறித்து அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தார். இதனால் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
அந்த வழக்கில், கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், பணிகளை நிறுத்த முடியாது என தமிழக அரசின் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
இதையடுத்து, எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டுமானப் பணிகளை முடித்தாலும், வழக்கு முடியும் வரை திறப்பு விழா நடத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், எம்ஜிஆரின் 102-வது பிறந்தநாளான இன்று (வியாழக்கிழமை) உயர் நீதிமன்ற உத்தரவின்படி திறப்பு விழா ஏதுமின்றி நூற்றாண்டு நினைவு வளைவு திறக்கப்பட்டது.