இந்தச் செய்தி தமிழ் ஆங்கில ஊடகங்களில் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை. புகைப்படத்தில் இருப்பது கொல்லப்பட்ட அமைச்சராகும்.
2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கையின் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக ஜெர்மன் அதிகாரிகள் கூறியுள்ளனர். 39 வயதான ஜீ. நவனீதன் என்ற நபர் தென்மேற்கு ஜெர்மனியில் வைத்து நேற்று முன்தினம் (புதன்கிழமை) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதாக சட்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் புலிகள் இயக்கத்தின் இரகசிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய ஒருவர் என்றும் 2005 ஓகஸ்டில் இவர் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலையுடனும், ஈ.பி.டி.பி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் கொலை முயற்சியுடனும் சம்பந்தப்பட்டவர் என்றும் சட்டத்துறை அதிகாரிகள் மேலும் கூறினர்.
சந்தேக நபர் எவ்வளவு காலம் ஜெர்மனியில் வசித்து வந்தார் என்பது பற்றிய விபரம் உடனடியாக அறிவிக்கப்படவில்லை.