அடுத்த வாரம் 25.01.2019 வெள்ளி ஐரோப்பிய நேரம் பி.ப. 18.30 மணிக்கு தயாகத்தில் இருந்து ரியூப்தமிழ் எப்.எம்மில் ஒலிபரப்பாக இருக்கிறது கி.செ.துரை எழுதி தயாரித்துள்ள நீல வானில் போகும் சில நீல மேகங்கள் என்ற இசையும் கதையும்.
இன்று புலம் பெயர் நாடுகளில் வாழ்வோருக்கும், தாயகத்தில் உள்ளோருக்கும் இடையே புரிதலை ஏற்படுத்த சரியான வெளிப்பாட்டு வடிவம் எதுவென்பது வானொலித்துறையில் ஒரு முக்கிய கேள்வியாகவே தொடர்கிறது.
புலம் பெயர் நாடுகளில் உள்ள மக்களால் தாயகத்தில் வாழும் மக்களுக்கு இங்குள்ள உண்மை நிலைகள் பல மறைக்கப்பட்டுள்ளன..
வெளி நாட்டு வாழ்வு பற்றி வளர்க்கப்பட்ட போலிக் கௌரவம் காரணமாக உருவாக்கப்பட்ட ஒரு மாயத் தோற்றம் இன்று தப்பான மரமாக வளர்ந்துவிட்டது தாயகத்தில்..
அதுபோல போராட்டம் நடந்த பூமி என்ற மரியாதையை காப்பாற்றியுள்ளதா தாயகம் என்ற கேள்விக்கான உண்மை வெளிநாடுகளில் மறைக்கப்பட்டுள்ளது.
இல்லாததை இருக்கிறதென்றும்..
இருப்பதை இல்லையென்றும்..
ஒரு போலியான வாழ்வு நிஜமாக மாயமான் போல ஓடுகிறது..
உண்மைகள் மறைக்கப்பட்டதால் வந்த வினை இது..
அன்று.. கள்ளி, நாகதாளி, இராவணன் மீசை போன்ற முட்பற்றைகள் வீட்டை சுற்றி வளர்ந்தபோது.. சிறியதுதானே என்று நினைத்தோம்.
ஆனால் இன்று என்ன நடந்தது..?
இன்று நாம் வீட்டை விட்டு வெளியே வரமுடியாதளவுக்கு முள்ளுப்பற்றை நாகதாளி போல பரவி, வீட்டின் வாசலையே முடிவிட்டது.
வெட்டினால் வலிக்குமென கருதி கைவிட்டோம், ஆனால் இன்றோ வெட்ட முடியாதபடி அது பலம் பெற்றுவிட்டது.
வெளிநாட்டவரா ஏமாற்றி பணம் பறிப்பது சரிதான்.. நீதிதான்.. அதிலென்ன தப்பு.. பறிக்கிறதுதான் பறிக்கிறீர்கள் எல்லாவற்றையுமே சுருட்டி பரதேசி ஆக்கிவிடுங்கள் என்ற எண்ணம் தாயகத்தில் பரிபூரணமாக வளர்ந்துவிட்டது.
இதை யார் தடுப்பது..
நிச்சயமாக ஸ்ரீலங்கா போலீஸ் தடுக்காது.. அப்படித் தடுப்பதானால் பலரை கைது செய்திருக்க வேண்டும்..
கைதுகள் நடைபெறவில்லை..
இந்த அவலத்திற்கு முடிவுகட்ட ஒரு தலைவன் வரமாட்டான்..
நாளை நாளை என்று பார்க்க முடியாது.. மக்களிடையே உண்மைகள் படிப்படியாக விவாதத்திற்கு வரவேண்டும்..
வானொலிகளில் விவாதம் நடத்தி வருகிறோம் நீண்டகாலமாக, இனி அதில் மேலும் ஒரு வளர்ச்சி அவசியமாகிறது. அது இசையும் கதையுமாக இருந்தால் எப்படியிருக்கும்.
இந்த எண்ணத்தில் ரியூப் தமிழ் எப்.எம்மில் உருவாக்கப்பட்டு வருகிறது இசையும் கதையும்.. சென்ற வாரம் வெளியான முகநூல் காதல் பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது அடுத்து வெளிவருகிறது நீல வானில் போகும் சில நீல மேகங்கள்.
வானம் நீலம்.. மேகங்களும் நீலமாக இருந்தால் வானுக்கும், மேகத்திற்கும் வித்தியாசம் தெரியாதன்றோ.. அது போல நமது போலிக் கௌரவத்தால் உண்டான உண்மைகளும் நிஜமான வாழ்க்கை என்னும் நீல வானும் பேதம் தெரியாது மறைந்துள்ளன. இந்த நீல மேகங்களை ஒளியடித்து காட்டுகிறது இசையும் கதையும்.
இசையும் கதையும் என்றுவிட்டு சும்மா ஒரு காதல் கதையை எழுதுவதல்ல, அதற்கு நிறையப்பேரும் நிறைய எப்.எம்களும் உள்ளன.
ஆனால் இவர்களில் இருந்து வேறுபட்டு, மாபெரும் சமுதாய ஆய்வுகளை மக்களிடம் கொண்டு செல்ல இசையும் கதையும் என்ற வடிவத்தை எப்படி பயன்படுத்துவது என்ற கோணத்தில் இப்படைப்புக்கள் வெளிவர ஆரம்பிக்கின்றன.
இந்த வகையில் ஈழத் தமிழ் வேந்தன் எல்லாளன் என்ற இசையும் கதையும் தமிழின வரலாற்றை இன்றைய தாயக இளையோருக்குக் காட்டியது.
இப்போது மூன்றாவது படைப்பு வெளி வருகிறது.. இதன் தயாரிப்பு வேலைகள் சும்மா வாசித்துவிட்டு பாட்டு போடுவதல்ல.. ஒரு திரைப்படத்தை விட தாக்கமுடையதாக இருக்கும்.
ஒரு பெரும் சமூகப்பணி மக்களிடையே கொண்டு செல்லப்படாமல் உறங்கிக் கிடக்கிறது. அதை நமக்கு கிடைத்த வானொலி மூலம் கொண்டு செல்கிறோம்.
அடுத்த வாரம் கேட்க தயாராகுங்கள்..
அலைகள் 19.01.2019 சனி