பாஜகவுக்கு எதிராக கொல்கத்தாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடிய நிலையில் மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பவர்கள் ஒன்றுசேர்ந்து மெகா கூட்டணியை உருவாக்கியுள்ளனர் என்று மோடி கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதையொட்டி இப்போதே தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தின் 80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதன் பின்னணியில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவின் பிரிகேட் பேரேடு மைதானத்தில் இன்று பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இம்மாநாட்டை மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியின் தலைநகரான சில்வாசாவில் பொது நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
அப்போது, பொது மக்களின் பணத்தை சிலர் (எதிர்க்கட்சிகள்) கொள்ளையடித்து வந்தனர். ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கைகள், அவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றின. இதனால் அவர்கள் கோபமடைந்தனர். அவர்கள்தான் இன்று மெகா கூட்டணி அமைத்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் பாஜகவில் இருந்து ஒரேயொரு எம்எல்ஏ மட்டுமே உள்ளார். ஆனாலும் எங்களைக் கண்டு பயப்படும் அவர்கள், தங்களைக் காப்பாற்றச் சொல்லி மக்களிடம் கேட்கின்றனர்.
ஜனநாயகம் மூச்சுத்திணறுவதாகவும் அதை அவர்கள்தான் காப்பாற்றப் போவதாகவும் பேசுகின்றனர். இதைக் கேட்கும் மக்கள், மிகவும் பிரமாதமாகப் பேசுகிறீர்களே என்று கிண்டலடிப்பர் என்றார் மோடி.