தமிழகத்தில் 8 கோடி முதல் 55 கோடி ஆண்டுகளுக்கு முன் 5 கி.மீ சுற்றளவுள்ள விண்கல் தாக்கியதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விண்கல் தற்போதுள்ள நீலகிரிக்கும், கொடைக்கானலுக்கும் இடையிலான பகுதியில் தாக்கி இருக்கலாம், அதன் மூலம் மிகப்பெரிய உயிரினமான டைனோசர்கள் அழிந்திருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மைசூர் பல்கலைக்கழகத்தில் உள்ள பூமியின் ஆதி வரலாற்றுத்துறையை ஆய்வு செய்யும் நில அறிவியல் துறையின் பேராசிரியர் கே.என்.பிரகாஷ் நரசிம்மா, மங்களூரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கடல் நிலவியல் துறையின் முன்னாள் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமண்யா ஆகியோர் நுண்ணோக்கி கொண்டும், வெறும் கண்களாலும் பாறைகள் குறித்தும், விண்கற்கள் குறித்தும் ஆய்வு நடத்தியுள்ளனர்.
இந்த ஆய்வில் தாங்கள் கண்டுபிடித்த விஷயங்களை, தகவல்களை ‘ காவேரி பள்ளம்’ என்ற தலைப்பில் “ ஜர்னல் ஆப்தி ஜியோலஜிகல் சொசைட்டி ஆப் இந்தியா” இதழில் வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வுக்கட்டுரைக்கு ராதாகிருஷ்ணன் 2018 விருதும் கிடைத்துள்ளது. மத்திய நில அறிவியல் துறை அமைச்சகத்தின் நிதி உதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
தாங்கள் தாக்கல் செய்த ஆய்வுக் கட்டுரை குறித்து அறிவியல் வல்லுநர்கள் தி இந்துவிடம்(ஆங்கிலம்) கூறியதாவது:
தென் இந்தியாவில் குறிப்பாக இன்றுள்ள நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்குஇடையே 5 கி.மீ சுற்றளவு கொண்ட மிகப் பிரம்மாண்டமான விண்கல் தாக்கி இருக்கலாம் என்று அறிகிறோம். இந்த விண்கல் தாக்குதல் என்பது 8 கோடி ஆண்டுகள் முதல் 55 கோடி ஆண்டுகளுக்குள் இருக்கலாம். இந்த தாக்குதலின்போதுதான் மிகப்பெரிய உயிரினமான டயனோசர் அழிந்திருக்கலாம் என்று கருதுகிறோம்.
இந்த விண்கல் தாக்குதலால் உருவான பள்ளம் மட்டும் 120 கி.மீ சுற்றளவு இருக்கும். இந்தப் பள்ளத்துக்கு பெயர்தான் காவேரிப் பள்ளம் என்று பெயர். இது உலகிலேயே நான்காவது மிகப்பெரிய பள்ளமாக இருக்கும் என்று எண்ணுகிறோம்.
இந்தக் காவிரி பள்ளம் என்பது தற்போதுள்ள நீலகிரிக்கும், கொடைக்கானலுக்கும் இடையே ஏற்பட்டுள்ளது. காவிரிப் பள்ளத்தின் ஒரு பகுதிதான் பாலக்காடு மலைப்பகுதியும், திம்மம் மலைப்பகுதியாகும். இதற்கான ஆதாரங்கள் கர்நாடகாவில் பெலகாவடி மற்றும் சிவனசமுத்ராவில் இருக்கிறது. வடக்கில் இருந்து 10º20’ to 11º30’N அட்சரேகை மற்றும் கிழக்கில் இருந்து76º50’ to 78ºE தீர்க்கரேகையில் இருக்கிறது. அந்தப் பள்ளத்தின் மையம் என்பது கிழக்கில் 11ºN and 77º30’E இருக்கிறது. இந்த காவிரிப் பள்ளத்தை வெறும் கண்களால் காண முடியாது, செயற்கைக்கோள் உதவியுடன் மட்டுமே காண முடியும்
இவ்வாறு அறிவியல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.