தனி நாடு வேண்டும் என்ற எண்ணத்தில் தாம் தற்போது இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.
சமஷ்டி கோரிக்கையை கைவிட்டு விட்டு தாம் மத்திய நிலைக்கு தற்போது வந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தெரண தொலைக்காட்சியில் நேற்று (22) இரவு இடம்பெற்ற ´வாதபிட்டிய´ அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வௌியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஆட்சி முறையில் அதிகாரப் பரவலாக்கல் தமக்கு வேண்டும். அது சமஷ்டியாக இருக்க வேண்டியதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது அரசியலமைப்பு சம்பந்தமான அறிக்கையே சமர்பிக்கப்பட்டிருப்பதாகவும், அது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தி நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போது நாட்டின் பெயர் ஜனநாயக சோசலிச குடியரசு என்று இருப்பதாகவும், ஜனநாயகம், சோசலிசம், குடியரசு என்று இல்லாமல் இலங்கை என்று மாத்திரம் அழைப்பது தொடர்பிலும் கருத்துக்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் இலங்கைக் குடியரசு என்று மாத்திரம் அழைப்பது தொடர்பிலும் கருத்துக்கள் நிலவுவதாக அவர் கூறினார்.
இவை இரண்டில் ஒன்றுதான் இறுதியில் புதிய அரசியலமைப்பு ஊடாக நிறைவேற்றப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியுள்ளார்.
தாம் தனி நாடு கோரி 30 ஆண்டுகாலம் போரிட்டதாகவும், இப்போது அங்கிருந்து மத்திய நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்