வருமானவரி மற்றும் செல்வ வரி ரூ.16.75 கோடியை செலுத்தாமல் பாக்கி வைத்த காரணத்தால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் வீடு, ஐதராபாத் வீடு, பார்சன் காம்ப்ளக்ஸ் பிளாட், மந்தைவெளி செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள சொத்து ஆகியவற்றை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. இந்த தகவலை சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த துறை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது.தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து அவர் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், போயஸ் கார்டன் பகுதி மக்கள் அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதை எதிர்த்து சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அதில், அரசு பணத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவு இல்லம் அமைக்கக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்த மாதம் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த சொத்து மீது வரி பாக்கிக்காக, சொத்து முடக்கம் போன்ற நடவடிக்கைகள் வருமானவரித்துறையிடம் உள்ளதா? போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற ஏதாவது ஆட்சேபனை உள்ளதா? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை துணை ஆணையர் ஜி.சோபா சார்பில் ஒரு அறிக்கையை வக்கீல் ஏ.பி.சீனிவாஸ் தாக்கல் செய்தார். அறிக்கையில்” கடந்த 1990-1991 நிதியாண்டு முதல் 2011-2012 நிதியாண்டு வரை ஜெயலலிதா செல்வ வரி பாக்கியாக ₹10 கோடியே 12 லட்சத்து, 1,407 வைத்துள்ளார். அதேபோல், 2005-2006 நிதியாண்டு முதல் 2011-2012 வரை வருமான வரி ₹6 கோடியே 62 லட்சத்து 97,720 வரி பாக்கி வைத்துள்ளார்.
இது தொடர்பாக வருமானவரித்துறை எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில், வரி பாக்கிக்காக அவரது போயஸ் கார்டன் வீடு, அண்ணாசாலையில் உள்ள பார்சன் காம்ப்ளக்சில் தரை தளத்தில் உள்ள சொத்து ஆகியவை கடந்த 2007 ஆண்டு மார்ச் 13 தேதி முடக்கம் செய்யப்பட்டது. மேலும், 2013ம் ஆண்டு மார்ச் மாதம் மந்தைவெளி செயின் மேரிஸ் சாலையில் உள்ள ஒரு சொத்து முடக்கம் செய்யப்பட்டது. ஐதராபாத், நகர் காலனியில் உள்ள வீடு கடந்த 2007 ஜூலை 31 தேதி முடக்கம் செய்யப்பட்டது” என கூறப்பட்டிருந்தது.
அப்போது நீதிபதிகள், வரிப்பாக்கியை செலுத்திவிட்டால் அந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற உங்களுக்கு ஆட்சேபனை இருக்கிறதா? என்று வருமானவரித்துறை வக்கீலிடம் கேட்டார். அதற்கு வருமான வரித்துறை வக்கீல் ஏ.பி.சீனிவாஸ், ‘வரி பாக்கியை செலுத்தி விட்டால், போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார். அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, போயஸ் கார்டனின் வீடு மற்றும் நிலத்தை நினைவு இல்லமாக மாற்றும்போது அந்த சொத்துக்குரிய தொகை ஜெயலலிதாவின் வாரிசுகளுக்கு அரசு வழங்கும். அந்த தொகையில் இருந்து இந்த வரியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அதற்கு நீதிபதிகள், இந்த பணத்தை யாரிடம் கொடுப்பீர்கள் என்று கேட்டனர். அதற்கு அட்வகேட் ஜெனரல், சொத்துக்களுக்கு தாங்கள்தான் வாரிசு என்று தீபா, தீபக் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது என்றார்.இதையடுத்து, வருமான வரித்துறையின் அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், 2012க்கு பிறகு வரி பாக்கியுள்ளதா? என்ற விவரம் அதில் இல்லை. எனவே, தெளிவான அறிக்கையை வருமான வரித்துறை தாக்கல் செய்யவேண்டும். அதேபோல, தமிழக அரசும், ஜெயலலிதாவின் வரி பாக்கி தொகையை எப்படி செலுத்துவது? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் பிப்ரவரி 7ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.