இன்னும் மூன்று மாதத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் தயாநிதிமாறன் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் திமுக சார்பில் பொதுமக்களை சந்திக்கும் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டம் கோபி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவலூர், அயலூர், நாகதேவன்பாளையம், வௌ்ளாங்கோவில், மொடச்சூர் ஆகிய ஊராட்சிகளில் நேற்று ஊராட்சி சபை கூட்டங்கள் நடைபெற்றன. கூட்டத்திற்கு, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான தயாநிதி மாறன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
ஓய்வூதியம், விதவை உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, கல்வி உதவித்தொகை, குடிநீர் வசதி, கழிப்பிடம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்களிடமிருந்து ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற பின் பொதுமக்களிடம் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் பேசியதாவது
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் உரிய காலத்தில் நடத்தி இருந்தால் இது போன்ற குறைகள் இருந்திருக்க வாய்ப்பு குறைவு. ஆனால் அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நமக்கு நாமே திட்டத்தை அதிமுக அரசு தொடர்ந்து செயல்படுத்தாததால், கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படாமல் உள்ளன.
திமுக ஆட்சியில் பாரபட்சமின்றி அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் கிடைத்தன. ஆனால், தற்போது அந்த நிலை இல்லை.
இன்னும் 3 மாதத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஆட்சி அதிகாரம் நம்மிடம் வரும். அப்போது உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும்.
ஜெயலலிதா முதலமைச்சராக வேண்டும் என்று நீங்கள் ஓட்டு போட்டீர்கள். ஆனால் இன்று வேறு ஒருவர் முதலமைச்சர் பதவியில் அமர்ந்து உள்ளார். கடந்த 2 நாட்களாக அரசு ஊழியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அரசு அலட்சியம் காட்டி வருகின்றது. மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது, என்றார்.
கூட்டத்தில் மாநில விவசாய அணி இணை செயலாளர் கள்ளிப்பட்டி மணி, ஒன்றிய செயலாளர்கள் சிறுவலூர் முருகன், செந்தில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பவானிசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.