சம்மந்தரை கவிழ்த்து மகிந்தவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கொடுத்து, மகிந்த ராஜபக்ஷவின் மகன் திருமண வீட்டுக்கு ரணிலே தலைமைதாங்கி, தீர்வுத்திட்டத்தை ஏமாற்றி காரியம் முடிந்துவிட்டது.
இப்போது பழைய செல்வநாயகம் காலத்து குரல் சம்மந்தரிடம் கேட்கிறது.. தமிழருக்கான எந்தவொரு தீர்வும் கிடைக்காது என்று பகிரங்கமாக அறிவித்து, அதிலிருந்து விலகி சாதாரணமாக பாராளுமன்றம் போய் வரவேண்டிய நிலை இப்போது கூட்டமைப்பிற்கு.
சிறீலங்கா ஆளும் கட்சியும், ஐ.தே.கவும் ஆடியது முற்றுமுழுதான நாடகம் மட்டுமே என்ற இலக்கு நோக்கி இலங்கை அரசியல் போகிறது.
இந்த நிலையில் சம்மந்தர் குரல் இப்படியிருக்கிறது..
அரசின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கும் நிலையில் அதேகட்சியைச் சார்ந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கியிருப்பது முரண்பாடான செயற்பாடாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (25) ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்தார்.
அரசியலமைப்பில் சிறுபான்மை கட்சிகளிற்கும் சிறுபான்மை மக்களிற்கும் உள்ள உரித்தானது பாதுகாக்கப்பட்டு பேணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் அதன் பங்காளி கட்சியான இலங்கை சுதந்திர கட்சி ஆகியவற்றின் தலைவராவார். எனவே, தற்போதைய ஜனாதிபதி பல்வேறு அமைச்சு பதவிகளை வகிக்கும் அமைச்சராகவும், அமைச்சரவையின் தலைவராகவும், நிறைவேற்றின் தலைவராகவும், அரசாங்கத்தின் தலைவராகவும் அமைச்சரவையின் அங்கத்தவராக இருக்கின்ற காரணத்தினால் கூட்டாக பாராளுமன்றத்திற்கு பதிலும் பொறுப்பும் கூறவேண்டிய ஒருவராக இருக்கின்றார்.
இது முரண்பாடானது என்பதை கலாநிதி நிஹால் ஜெயவிக்ரம ஊடகமொன்றுக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இதற்கமைய எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டமை முரண்பாடானதாகும் என சுட்டிக் காட்டினார்.