போதைப்பொருள் கடத்தல் வர்த்தகத்தில் முன்னணி வகிப்பவர்களென அடையாளம் காணப்பட்டுள்ள 24 முக்கிய நபர்களின் பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
போதைப்பொருள் வர்த்தகர்களது சொத்துக்களை அரசுடமையாக்குமாறு பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர விடுத்துள்ள பணிப்புரைக்கமையவே குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பேருவளையில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருளுக்கு சொந்தக்காரரான சமந்த த சில்வா உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட மிகமுக்கிய 24 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்களே இவ்வாறு அரசுடமையாக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் 2006 ஆம் ஆண்டின் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்திற்கமையவே போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படவுள்ளன என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார். சொத்துக்களை அரசுடமையாக்குவதற்காக பட்டியலிடப்பட்டுள்ள
24 நபர்களும் உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்தில் போதைப்பொருள் கடத்தலில் முன்னணி வகிக்கும் பிரபல புள்ளிகளென்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 23 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பற்றிய விசாரணைகளை பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்திருந்ததாகவும் அண்மையில் பேருவளையில் 231 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதையடுத்து துலிப் சமந்த த சில்வா 24ஆவது நபராக இப்பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பேருவளை மொரகல பிரதேசத்தின் இலக்கம் 295/3 எனும் முகவரியைச் சேர்ந்த சமந்த த சில்வாவுக்கு பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் இருப்பதாக பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கண்டறிந்துள்ளது என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார். இதேவேளை அடையாளம் காணப்பட்டுள்ள ஏனைய 23 முக்கியப் புள்ளிகளுள் சிலர் வெளிநாடுகளிலும் மற்றும் சிலர் விளக்கமறியலிலும் இருப்பதாகவும் இவர்களிடம் பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் இருப்பதை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கண்டறிந்துள்ளதென்றும் அவர் தெரிவித்தார். இதற்கு முன்னர் சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் மூலம் சொத்து சேர்த்திருப்பது விசாரணைகள் மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்டதையடுத்து அவர்களது சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டன.
நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகம் மூலம் நாளொன்றுக்கு சுமார் 5 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுள் இளம் வயதினரே அதிகமாக போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.
நாட்டில் போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே கோடிஸ்வர போதைப்பொருள் வர்த்தகர்களது சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.