இனவாதத்தையும், மதவாதத்தையும் கூறி ஆட்சியில் இருந்தவர்கள் அவர்களது ஆசனங்களையும், குடும்பங்களையும் பலப்படுத்தவே முயன்று வந்தார்கள். இனவாதமும், மதவாதமும் அவர்களுக்கு பெரும் ஆயுதமாக இருந்தது. இதனை வைத்து நாட்டின் பல பிரதேசங்களையும் எரித்தார்கள். அந்த தீயில் பொது மக்களே வெந்து சாம்பலானார்கள்.கடந்த கால ஆட்சியின் போது இவைதான் அரங்கேற்றப்பட்டு வந்தது என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்ச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
திருக்கோவில், காயத்திரிபுரத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட 159 ஆவது காயத்திரி மாதிரிக் கிராமத்தை சனிக்கிழமை (26) திறந்து, மக்களிடம் கையளித்து வைத்து உரையாற்றுகையில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரன் கோடீஸ்வரன், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டார, திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான யூ.கே.ஆதம்லெப்பை, வீடமைப்பு அதிகார சபையின் உயரதிகாரிகள், ஊழியர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
புத்தபெருமானின் போதனைகளை முறையாகக் கடைப்பிடிப்பவர்கள் அனைத்து மதங்களையும், மக்களையும் மதித்து நடக்க வேண்டும். உலகில் வாழ்ந்து வரும் அனைத்து மக்களும் சந்தோசமாகவும், சுகதேகிகளாகவும் வாழ வேண்டும் என்றே கூறியிருந்தார். பௌத்தர்கள் மட்டும்தான் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என புத்த பெருமான் கூறியிருக்கவில்லை என்பதனை இனவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
இனவாதத்தையும், மதவாதத்தையும் கூறி ஆட்சியில் இருந்தவர்கள் அவர்களது ஆசனங்களையும், குடும்பங்களையும் பலப்படுத்தவே முயன்றுவந்தார்கள், இனவாதமும், மதவாதமும் அவர்களுக்கு பெரும் ஆயுதமாக இருந்தது. இதனை வைத்து நாட்டின் பல பிரதேசங்களையும் எரித்தார்கள். அந்த தீயில் பொது மக்களே வெந்து சாம்பலானார்கள்.
கடந்த கால ஆட்சியின் போது இவைதான் அரங்கேற்றப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே அரசியல் வேறுபாடுகளை மறந்து பலமிக்க ஒரு அமைப்பாக நின்று போராடி அதில் வெற்றி பெற்று இந்த நாட்டையும், மக்களையும் மீட்டெடுத்தோம்.
இந்த நாட்டுக்கு இனவாதமோ, மதவாதமோ தேவையில்லை. சிறந்த மனிதர்களைக் கொண்ட ஒரு சுபீட்சமான நாடே தேவையாகும். மீண்டும் இந்த நாட்டை கைப்பற்றுவதற்கு இனவாதிகளும், கயவர்களும் ஒன்று சேர்ந்துள்ளார்கள். அதற்கு ஒரு போதும் மக்கள் இடமளிக்கக் கூடாது. நாட்டையும், மக்களையும் என்றும் நேசிப்பவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும்.
ஆட்சிக்கு வரும் போது நாங்கள் எதனை கூறியிருந்தோமோ அதனை இன்று நிறைவேற்றி வருகின்றோம். நாட்டின் அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு, தொழில்வாய்ப்பு என அனைத்து விடயங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றது எமது அரசாங்கம்.
எனவேதான் இந்நாட்டு மக்கள் தெளிவான சிந்தனையோடு இருக்க வேண்டும். மக்கள் ஒரு போதும் இனவாதம், மதவாதம் மற்றும் பிரதேச, அரசியல் வேறுபாடுகளுக்கு ஆளாகிகுழப்பங்களுக்கு காரணமாக அமையக் கூடாது. அவ்வாறான விடயங்களை வெறுத்து ஒருதாய் பிள்ளைகளைப் போன்று என்றும் ஒற்றுமையாக வாழ்ந்து இந்நாட்டையும், தத்தமது பிரதேசங்களையும் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். இதற்காக நாங்கள் எமது உயிர்களையும் துச்சமாக மதித்து மக்களுடன் மக்களாகப் பணியாற்றுவதற்கு என்றும் தயாராகவுள்ளேன்.