டென்மார்க் – நோர்வே நாடுகள் உலகக்கிண்ணத்திற்கான இறுதியாட்டத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு மோதுகின்றன.
இது உதைபந்தாட்டமல்ல கைகளால் எறியும் கொன்ட்போல் எனப்படும் விளையாட்டாகும் ஆண்கள் அணிக்கான உலகக்கிண்ண இறுதியாட்டம் இதுவாகும்.
இது ஏதோ ஜியுபியல்ல உலகக்கிண்ணம் ஐயா உலகக்கிண்ணம்.. உஜாராகுங்கள்.
அதுவும் எங்கே நடக்கிறது..?
டென்மார்க்கில் தமிழர்கள் அதிகமாக வாழும் கேர்னிங் நகரில், யூஸ்க் பாங்கிற்கு சொந்தமான பொக்ஸ்சன் என்னும் விளையாட்டு அரங்கில் நடக்கிறது.. ஒன்றா இரண்டா அங்கே உள்ள 15.000 இருக்கைகளும் நிறைந்துவிட்டன.
தங்கும் விடுதிகள் எல்லாம் இடமின்றி பொங்கி வழிகின்றன, கேர்னிங் நகரில் உள்ள கோட்டல் ஒன்றின் உரிமையாளர் கூறும்போது, ஜேர்மனியில் இருந்து 30 அறைகளுக்கு ஆடர் வந்ததாகவும் இடமின்மையால் தாம் நிராகரித்துவிட்டதாகவும் கூறுகிறார்.
யாரும் எதிர்பாராதவிதமாக அரையிறுதி ஆட்டத்தில் பிரான்சை வென்று இறுதியாட்டத்திற்கு போயிருக்கிறது டென்மார்க். அதேபோல ஜேர்மனியை வென்று இறுதியாட்டத்திற்கு வந்துள்ளது நோர்வே.
இந்த ஆட்டத்தில் முன்னரும் ஒரு தடவை நோர்வே – டென்மார்க் விளையாடிய போது டென்மார்க் வென்றது. ஆகவே இந்த ஆட்டத்தில் பழி தீர்த்து டென்மார்க்கை வென்று இறுதிக்கிண்ணத்தை கைப்பற்ற நோர்வே சன்னதமடைந்துள்ளது.
மாரியா கொக்கா…?
இரு அணிகளிலும் யார் அதிகமான தொழில் நுட்ப தவறுகளை இழைக்கிறார்களோ அவர்களே தோல்வியடைவர். மற்றப்படி இரு அணிகளும் சமபலமுடைய அணிகளே. இந்தப் போட்டி தொடரில் டென்மார்க் 40 தொழில்நுட்ப தவறுகளையும், நோர்வே 70 தவறுகளையும் இழைத்துள்ளன. ஆகவே டென்மார்க் சரியாக தவறிழைக்காமல் விளையாடினால் வெல்ல முடியும்.
ஆனால் நோர்வேயில் இரண்டு வீரர்கள் பாயும் புலிகளாக உள்ளனர். ஒருவர் தடுப்பதிலும் இன்னொருவர் கோல் போடுவதிலும் யுனிக்கான ஆட்டக்காரர். டென்மார்க்கின் மைக்கல் கன்சனின் ஆட்டமே வெற்றிக்கு வழி வகுக்க வேண்டும்.
டென்மார்க் ஏற்கெனவே மூன்று தடவைகள் உலகக்கிண்ண இறுதியாட்டத்தில் விளையாடி தோற்றுள்ளது. இது நான்காவது வாய்ப்பு, இம்முறையும் தோற்றுவிட்டு மக்கள் முன் நிற்க முடியாது.
டென்மார்க் இறுதியாட்டத்தில் விளையாடுவதால் இரண்டு மில்லியன் மக்கள் இன்று தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னால் இருப்பார்கள்.
கடைகள் எல்லாம் பல மடங்கு உணவை தயாரித்து விற்க தயாராகின்றன, பியர் பீப்பாக்கள் உருள ஆரம்பித்துள்ளன. தங்க வடிவில் கேக் செய்து விற்கும் வியாபாரமும் ஆரம்பித்துள்ளது. எங்கும் டென்மார்க் தேசிய கொடிகள் பறக்கின்றன. நமது செய்தியாளர் பொன்ஸ்சன் அரங்கில் நின்று தரும் காணொளி செய்தியை காண கீழே அழுத்துங்கள்.
அலைகள் 27.01.2019 ஞாயிறு