பாகிஸ்தானில் முதல் இந்துப் பெண் நீதிபதியாக நியமனம்

பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்துப் பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுப் பொறுப்பேற்க உள்ளார்.

பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் உள்ள குவம்பர் சஹாதாகோத் மாவட்டத்தைச் சேர்ந்த சுமன் குமாரி போதன் என்பவர் சிவில் நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத் நகரில் எல்எல்பி பட்டப்படிப்பை முடித்த சுமன் குமாரி போதன், கராச்சியில் உள்ள ஷாபிஸ்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டம் பயின்றார். அதன்பின் தனியார் சட்டசேவை நிறுவனத்தில் சுமன் குமாரி பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நீதிபதிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து சிவில் நீதிபதியாகத் தனது சொந்த மாவட்டமான ஷகதாபாத் மாவட்டத்திலேயே சுமன் குமாரி பொறுப்பேற்க உள்ளார்.

இது குறித்து சுமன் குமார் போதனின் தந்தை பவன் குமார் போதன் கண் மருத்துவர். அவர் கூறுகையில், “என்னுடைய மகள் சுமன் குமாரி, அவரின் சொந்த மாவட்டத்திலேயே ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று எண்ணினேன். உண்மையிலேயே சிறுபான்மை மதத்தில் இருந்து நீதிபதியாகப் பணியாற்றுவது சவாலான பணி. ஆனாலும், எனது மகள் நேர்மையுடன், நீதி தவறாமல் பணியாற்றுவார் என நம்புகிறேன் ” எனத் தெரிவித்தார்.

சுமன் குமாரி போதனின் மூத்த சகோதரி மென்பொருள் பொறியாளராகவும், மற்றொரு சகோதரி கணக்குத் தணிக்கையாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.

பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்படுவது முதல் முறை அல்ல. ஏற்கெனவே இதற்கு முன், 2005 முதல் 2007 வரை, ராணா பகவான்தாஸ் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார். ஆனால், பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்படுவது இதுதான் முதல் முறையாகும்.

அது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த கிருஷ்ண குமாரி கோலி என்ற இந்துப் பெண் சிந்து மாநிலத்தில் இருந்து முதல்முறையாக எம்.பி.யாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts