மூத்த எழுத்தாளரும், இசை விமர்சகருமான சாருகேசி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80.
தமிழின் பிரபல வார, மாத இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்த சாருகேசியின் இயற்பெயர் எஸ்.விஸ்வநாதன். விஸ்வநாதன் சுப்ரமணியன் என்கிற இவரது இயற்பெயரை சாருகேசியாக்கியவர் வாதூலன். அப்போது இவருக்கு சாருகேசி என்று ஒரு ராகம் இருப்பதுகூட தெரியாது. பின்னாட்களில் நிறைய கச்சேரிகள் கேட்டு, புத்தகங்கள் படித்து தனது கர்னாடக இசை அறிவைப் பெருக்கிக் கொண்டார்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் சங்கீத, நாட்டிய, நாடக விமர்சனங்கள் எழுதி வந்த சாருகேசி சுமார் 60 வருடங்களாக எழுத்துலகுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். சாருகேசியின் முதல் கட்டுரை ‘கண்ணன்’ (1955) இதழில் வெளியானது. அதற்கு வழங்கப்பட்ட சன்மானம், ரூபாய் 5. முதல் சிறுகதை ‘கல்கி’யில் (1960) வெளியானது.
அகமதாபாத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த சாருகேசி, அந்த நிறுவனம் வெளியிட்ட பத்திரிகையில்தான் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தார். சென்னை வந்ததும் ஹிந்து, வீக் எண்ட் எக்ஸ்பிரஸ், எகனாமிக் டைம்ஸ் போன்ற நாளேடுகள் இவருடைய ஆங்கிலக் கட்டுரைகளை வெளியிட்டு ஊக்கப்படுத்தின.
டாக்டர் சுதா மூர்த்தியின் மூன்று ஆங்கில நூல்களை தமிழில் மொழிபெயர்த்து டிரான்ஸ்லேட்டர் அவதாரமும் எடுத்தார் சாருகேசி.
இலக்கிய ஈடுபாடு கொண்டவர்கள் இசை குறித்த ஆர்வம் மிக்கவர்களாக இருப்பது தற்போது காணக்கிடைப்பது அரிது என்ற நிலையில் சாருகேசி மிகுந்த இசைஞானத்தோடு இளம் கலைஞர்களை அறிமுகப்படுத்துவதிலும் அவர்களது நிறை குறைகளை புன்முறுவலோடு சுட்டிக்காட்டுவதிலும் தேர்ந்தவராக இருந்தார்.
ஒவ்வொரு டிசம்பரிலும் பத்திரிகையில் வெளியாகும் இசை குறித்த இவரது கட்டுரைகள் பெரும் கவனம் பெற்றன. 28 இளம் கலைஞர்களைச் சந்தித்து எழுதிய கட்டுரைத் தொகுப்பு அண்மையில் ‘இயல் இசை நாடகம்’ என்ற பெயரிலேயே நூலாக வெளிவந்தது.
இலக்கியம், இசை விமர்சனப் பணிகள் தவிர, புதிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் ஆர்வம் மிக்கவராக இருந்தார். அவ்வகையில் புத்தக நண்பர்கள் சங்கத்தில் இவரது பங்களிப்பு முக்கியமானது.
சாருகேசி எழுத்தாளர் தேவனின் உறவினர். அவரைப் போலவே நகைச்சுவையோடு எழுதும் ஆற்றலும் பேச்சாற்றலும் படைத்தவர். தேவன் அறக்கட்டளையிலும் முக்கியப் பொறுப்புகளை ஏற்று தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த சாருகேசி சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், இசைக் கலைஞர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.