அப்போது எனக்கு பதினொரு வயது.. தீர்த்தம் வரப்போகிறது போட்டிக்கோ வேலைகள் சூடுபிடித்துவிட்டன. பிள்ளையார் கோயில் மடத்திற்கு ஓடுகிறேன் அங்கே அப்பு அண்ணாவின் புகைக்குண்டு ஒட்டும் வேலைகள் துரிதமாக நடக்கிறது.
அதற்கு அப்பால் ஒரு வில்வ மரம், அதைத் தாண்டி நெடியகாட்டு பிள்ளையார் கோயிலுக்குள் நுழைகிறேன். சிவானந்தம் அண்ணா தலைமையில் பலர் பெண் வடிவிலான தேவகன்னி போட்டிக்கோவை செய்து கொண்டிருந்தார்கள்.
எத்தனையோ திருவிழாக்களை பார்த்தாலும் அந்தத்திருவிழாவுக்கு மட்டும் திரைப்படங்கள் போல போஸ்டல் அடித்து யாழ். குடாநாடு முழுவதும் ஒட்டியிருந்தார்கள். முன்னாள் நீதிபதி காலம் சென்ற செ. சண்முகசுந்தரம் அவர்களின் காரில் அந்த போஸ்டல்கள் பயணித்திருந்தன. அந்தக் காலத்தில் வர்த்தகம் அமோகமாக நடந்ததால் ஊரில் பணம் புரண்டு விளையாடியது தெரிந்தது.
அமரர் செ. மௌனகுரு வீட்டிற்கு அருகாமையில் தேவகன்னி போட்டிக்கோவை கட்ட அந்த நேரம் பார்த்து வந்த மழையை வர்ணிக்க முடியாது. காரணம் அந்த போட்டிக்கோவிற்கு வைக்கப்பட்ட கண். அதற்குக் காரணம் என்கிறார்கள். முத்துமாரி அம்மனை ஆயிரம் கண்கள் உள்ள அம்மாளாய்ச்சி என்பார்கள். இப்படி கண்கள் பொருந்தினவோ யார் அறிவார். அம்மனை முத்துமாரி அம்மன் என்பார்கள் மழையையும் மாரி என்றுதானே கூறுகிறார்கள்.
மழை, மாரி, முத்துக்களோ கண்கள் என்ற முத்துமாரி, தேவகன்னி போட்டிக்கோவின் முத்தான கண்கள் என்று கண்கள் பட்டுவிட்டன அதற்கு. நான் சிறுவனாக இருந்தாலும் இன்றும் அந்தக் கண் வைத்ததை அருகில் இருந்து பார்த்தது நினைவில் இருக்கிறது. வெள்ளை நிறமான விழியில் கறுப்பு பொட்டு வைத்தது போல அமைந்த அந்தக் கண்கள் இருக்கிறதே..
சொற்ப நேரத்தில் அழிந்து போன அந்தப் போட்டிக்கோவை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தால் அந்த அதிர்ச்சி சிவானந்தம் அண்ணாவை போலவே என்னைப்போல பலருடைய மனங்களில் இன்றும் பசுமையாக இருக்கிறது.
இதையெல்லாம் 2003 ம் ஆண்டு 35 பக்கங்களில் எழுதி வந்து இங்கிலாந்தில் உள்ள அப்பலோ பனானாலீப் அதிபர் திரு. த.பாலேந்திரராஜா, சுசேன் தம்பதியர் வீட்டில் வைத்து என்னிடம் தந்தார். நானும் ரியூப் தமிழ் ரவிசங்கர் சுகதேவனும் விழா மலர் வேலையை செய்து கொண்டிருந்ததால் அதை தட்டச்சு செய்யும் பணி என்னிடம் வந்தது. வல்வை ஒன்றியத்தின் விழா மலருக்காக அது எழுதப்பட்டிருந்தது.
ஒரு கட்டுரைக்கு 35 பக்கங்களா, புத்தகத்தின் பாதிப்பக்கம் நிறைந்துவிடுமே என்ன செய்யலாம்.. மேலும் அது சாதாரண படைப்பல்ல தண்ணீரில் போட்டால் தாழ்ந்துவிடுமளவுக்கு கனதியானது.
அந்தக் கட்டுரையின் ஜீவன் குலைந்து போய்விடக்கூடாது, பத்துப்பக்கங்களுக்குள் சுருக்க வேண்டும். மறுநாள் விழா மலர் வாசன் அச்சகம் போகவேண்டும். அதற்குள் காரியத்தை முடிப்பதானால் என்ன செய்யலாம். இரவு எட்டுமணிக்கு தட்டச்சு செய்ய ஆரம்பிக்கிறேன். அதிகாலை எழு மணிக்கு முடிந்தது. அதை கணியில் இருந்து வெளியில் எடுக்கும் போது சட்டென எல்லாமே அழிந்தது போல மறைந்துவிட்டது.
திகைத்துவிட்டேன், மறுபடியும் கணினியை நிறுத்தி ஸ்ராட் செய்து முத்துமாரி அம்மன்தான் இனி உதவவேண்டும் என நினைக்கிறேன். எல்லாமே திரும்ப வருகிறது. அந்தக் கட்டுரைதான் சிவானந்தம் அண்ணாவின் கையெழுத்தில் பதிவான அச்சு ஆவணம். வல்வை ஒன்றியம் 2003ம் ஆண்டு விழா மலரில் இடம் பெற்றுள்ளது.
அது மிக நீண்ட வரலாற்றுப் பதிவு. அதில் ஓரிடத்தில் அந்த விழா நடந்த நாளில் தானே கதாநாயகனாக கருதப்பட்டேன் என்று எழுதியிருந்தார். அதை நாம் அன்று தவிர்திருந்தோம், காரணம் சிவானந்தம் அண்ணா சுய புகழ்ச்சி காட்டுகிறார் என்று வரலாறு தெரியாதவர்கள் கூறிவிடக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருந்தோம். அதை அவரிடமும் சொல்லி அனுமதி வேண்டினேன்.
ஆனால் இப்படியொரு நாள் வந்து, அவர் நம்மை விட்டு சென்ற இந்தப் பொழுதிலும் அந்த உண்மையை மறைக்க வேண்டியதில்லையன்றோ..?
அந்தக்காட்சி போல ஒரு காட்சி பின்னர் ஒரு திரைப்படத்தில் வந்திருந்தது. பயணங்கள் முடிவதில்லை திரைப்படத்தில் அது வந்தது. அப்படத்தில் பாடகரான நடிகர் மோகன் முதல் முதலில் பாட ஆலயம் சென்றபோது எதிர்பாராது மழையும் புயலும் வீசியதால் ரசிகர்கள் எல்லாம் ஓடிவிடுவார்கள். அவர் கதறி அழுவார், முதல் முதல் ராகதீபம் ஏற்றும்போது புயல் மழையோ என்று அவர் பாட, போனவர்கள் எல்லாம் திரும்பி வருவார்கள். அத்தோடு அவர் புகழ் பெற்ற பாடகராவார். அதுபோல மழையால் அழிக்கப்பட்ட போட்டிக்கோவும், அழுதபடி நின்ற சிவானந்தம் அண்ணாவும், பின் அதைக்காண குடாநாடே திரண்டு வந்ததும் வரலாறு.
ஒரு கலை உயர்ந்த வடிவமாக இருந்தால் இப்படியான சோதனைகள் வருவதும், பின் அது வெல்வதும் வரலாறு. அந்தப் போட்டிக்கோ யாழ். தினகரன் விழாவில் பங்கேற்று தங்கம் வென்றது. அதுபோல பயணங்கள் முடிவதில்லை திரைப்படமும் வெள்ளிவிழா கண்டு இளையராஜாவை இசை ஞானியாக்கியது. மோகனை மைக் மோகனாக்கியது.
அன்று பெய்த மழையை சிவானந்தம் அண்ணா இப்படியாக வர்ணிக்கிறார். ” சித்திரை மாதம் காண்டாவனம், சூரியன் பூமியை அண்மிக்கும் காலம். இப்பருவத்தில் அதிகமாக மழையே வராது. ஆனால் சித்திரை 28ல் காலநிலையில் பெரும் குழப்பம் வருவது வழமை. இந்தக்காலநிலை என்றும் மாறுவதில்லை. ஆனால் தேவகன்னியை முழு உருவில் படைத்து சம்பூர்ணமாக உருவாக்கிய சில நிமிடங்களில் எங்கிருந்தோ ஏற்பட்ட புயல் காற்றுடன், மழையும் என்றுமில்லாதவாறு என் அழகிய உயர்ந்த கலை வண்ணத்தை சில நிமிடங்களில் மழை நீரால் கரைத்தது. காற்றின் வேகத்தால் அது சின்னாபின்னமாக்கப்பட்டு ஓர் எலும்பு உருவமாகவே காணப்பட்டது. இதனை அறிந்த ஊர் மக்கள் மனவேதனையுடன் அதைப்பார்க்க திரண்டு வந்தனர்.”
” என் சிந்தனை அழிக்கப்பட்டுவிட்டதென நான் வடித்த கண்ணீரோ மழை நீருடன் கரைந்து என் வாயில் பட்டு உப்புத்தன்மையை உருவாக்கியது. நான் ஒரு மரம் போல செய்வதறியாது நிற்க பலர் ஆறுதல் கூறினார்கள். என் தாயார் வள்ளியம்மைப்பிள்ளை ஒரு மூலையில் நின்று தன் மகனின் அற்புதப்படைப்பை பார்த்து அழுதபடி நின்றதை நான் கண்டு கொண்டேன்.”
” இப்படியாக கடதாசியில் ஒரு தேவகன்னி உருவத்தை இலங்காபுரியில் அதுவரை யாரும் உருவாக்கவில்லை என்பது திடமான உண்மையும், எனது கருத்துமாகும். தென்னிந்தியாவில் வைக்கப்படும் பெரிய அளவிலான கட்டவுட்டுக்கள் கூட அதன் பிறகே வந்தன. தேவகன்னியின் அன்றைய உயரம் 41 அடியாகும். ( சிவானந்தம் அண்ணா வயது 23 )”
” அத்தருணம் திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலயத்தில் சிற்ப வேலைகளுக்காக வந்திருந்த தமிழகத்தை சேர்ந்த தலைமை ஆசாரி என் தோளில் தட்டினார். தம்பி எதற்கும் நீ யோசிக்க வேண்டாம். இந்த அடைமழை, புயல் காற்று ஒரு தெய்வீக அற்புதம். உன் படைப்பில், முக்கியமாக கண்களின் அமைப்பு தெய்வீக சக்தி கொண்டதாக அமைந்துவிட்டது. எனவேதான் அந்தக் காட்சி சில விநாடிகள்தான் உங்களுக்கு காட்சி கொடுத்தது என்றார். எனக்கு புல்லரித்தது, இந்தக் கலை தென்னிந்தியாவிலேயே கிடையாது. அது உன்னிடம் உள்ளது கவலை வேண்டாம் என்றார்.”
” ஊரின் பிரமுகர்கள் வந்து எனக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க ஒரு பேர்ஜோ கார் என் முன்னால் வந்து நின்றது. எனக்கு கோப்பி தந்து, நனைந்த உடுப்புடனேயே யாழ்ப்பாணத்தில் உள்ள ஈ.ஏ.பாய் கடைக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த சகலவிதமான கடதாசிகளும் காரில் ஏற்றப்பட்டு, மீண்டும் ஊர் வரும் வேளையில் சங்கநாதம், சேமக்கல ஓசையுடன் சிறுவர்கள் வீடு வீடாக சென்று பல பொருட்களை சேகரித்தனர். நான் பிள்ளையார் கோயில் போக என்தேவ கன்னிக்கு அரைவாசி உயிர் கொடுக்கப்பட்டுவிட்டது.”
” ஊர் மக்கள் திரண்டு நின்று உதவி செய்தார்கள். சூதலிங்கம் அண்ணா காரில் ஓடி ஓடி அனைத்து பொருட்களையும் கொண்டு வந்து சேர்த்தார். ஊர்மக்கள் திரண்டு நின்று உதவிகள் செய்ய தேவகன்னி மின்னல் வேகத்தில் உருவாக்கப்பட்டாள் ” என்று கூறுகிறார்.
அவர் எழுதிய கட்டுரையில் மேலும் சில முக்கிய விடயங்கள் இருந்தன. இந்திரவிழாவை 1905ம் ஆண்டு பிரித்தானிய தேசாதிபதி பார்த்து ஆச்சரியப்பட்டதாகவும், அதன் பின்னர் 1965ம் ஆண்டு அது இந்திரவிழாவாக மாறியதாகவும் கூறுகிறார். அவர் அந்தக் கட்டுரையை எழுதியபோது அன்னபூரணி பயணித்த 65ம் ஆண்டு நினைவுகள் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தன. விழா மலரின் அட்டைப்படமும் அதுவாகவே இருந்தது.
இந்திரவிழா நடக்கும் வல்வையை அன்று ஓர் இராஜதானி என்றும், தேவலோக காட்சி என்றும் உருவகித்து, சிந்தித்ததாகவும், அதற்கு தன்னோடு சேர்ந்து வடிவம் கொடுத்தவர்கள் ஊறணி கணேசமூர்த்தி, பழனிவேல், விசுவண்ணா, வேலுப்பிள்ளை, மயிலேறும் பெருமாள் ( சண்டி ), தலைவர் நடராசா மகன் பாலி, சக்திவேல், சந்திரசேகரம் (சடைக்குட்டி), ஜெயச்சந்திரன் போன்றவர்கள் என்று கூறுகிறார்.
பிள்ளையார் கோயிலில் பூங்காவன மண்டபம், இராவணன் மலையை கட்ட சூத்திரதாரியாக இருந்தவர் கோணார் அப்பா குமாரசாமி என்கிறார். தனவந்த சீமான் செல்லத்துரை தண்டையலின் புத்திரர்கள் ஐந்து பேரும் பஞ்சபாண்டவர் என்று அழைக்கப்பட்டார்கள். எட்வேட் தங்கவடிவேல், குமரகுரு, யோககுரு, மௌனகுரு, ஞானகுரு ஆகியோரின் நல்லாசிகள் இருந்தன. அப்புஅண்ணா ( பாலசுந்தரம் ) சூதலிங்கம், கணக்கர் துரைரட்ணம், பரமகுரு, தாயுமாணவர் ஆகியோருடைய சிபாரிசிலேயே ஐந்து புதல்வர்களும் உதவிகளை வழங்குவார்கள் என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
அத்தோடு அக்கட்டுரையில் வல்வையின் நீண்ட வரலாற்றுப் புகழ் கோர்வையாக போகிறது. அது மட்டுமல்ல சில காலம் எனக்கு கைப்பட எழுதிய கட்டுரைகளை எழுதி அனுப்பி வந்தார். இவைகளைத் தவிர அவரில் நான் நேரடியாக அவதானித்த உயரிய பண்புகள் பல உண்டு.
அக்காலத்தே எழுபதுகளில் கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் என்னால் எழுதப்பட்ட இரண்டு நாடகங்களை மேடையேற்ற சென்றிருந்தோம். நாடகம் முடிவடைய மறுநாள் தமது வீட்டுக்கு அழைத்து சென்று விருந்து வைத்தார்.
அவருடைய வீட்டுக்கு அருகாமையில்தான் பிரபல சிங்கள நடிகர் காமினி பொன்சேகா இருந்தார், சிவானந்தம் அண்ணாவின் நண்பராகவும் அவர் இருந்துள்ளார். எம்மை அழைத்துச் சென்று அறிமுகம் செய்ய விரும்பினார் அத்தருணம் காமினி பொன்சேகா வீட்டில் இல்லை.அக்காலத்து நிதியமைச்சர் லங்காசமஜமாஜி தலைவர் டாக்டர் என்.எம்.பெரேராவின் நண்பராகவும் இவர் இருந்தவர். கொழும்பில் லிப்டனில் அவர் உயர் பதவியில் இருந்தவர் என்பதும், அவருடைய பணி மிகவும் கௌரவமானது என்பதையும் நேரடியாக பார்த்தேன்.
வெள்ளை நிற பீங்கான் கோப்பையில் சம்பா அரிசியில் செய்த புரியாணியை தந்தபோது அவருடைய செல்வச் செழிப்பு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அவர் வசித்த வீடும் மாளிகை போல அழகாக இருந்தது எனக்கு நல்ல ஞாபகம்.
இதற்கு சற்று முன்னதாக எனது மிகச்சிறிய பராயத்தில் ஒரு நாள் நாடக ஆர்வத்தில் நெடியகாடு போயிருந்தேன். அங்கு நடிகர். நாகேஸ்வரன் ஐயர் வீட்டின் அருகே இருந்த வீட்டில் ஒத்திகை ஆரம்பித்தது. சிவானந்தம் அண்ணா நாடக பிரதியை வாசித்துக் கொண்டிருந்தார். சோதிசிவம் அண்ணா, குட்டிக்கிளி அண்ணா, நேசன் போன்றோர் இருந்தது ஞாபகத்தில் போகிறது.
நாடக பிரதிக்கு பூசை வைத்து கடலை அவல் கொடுத்து பயபக்தியுடன் ஆரம்பித்ததை அன்று பார்த்தேன். பின்னர் நோதஜி வி.கவிலும் அவர் முக்கிய பாத்திரம் வகித்ததை பார்த்துள்ளேன். காட்டுவளவில் அவர் சகோதரியுடன் வாழ்ந்தபோது அவர் காட்டுவளவு வாசியாகவும் இருந்தார்.
அதேபோல திருணத்தின் பின் ஊரிக்காட்டு தொகுதியில் வல்வை நகரசபைக்கு போட்டியிட்டிருக்கிறார். அப்போது அவருடைய சின்னம் ஆப்பிள் பழம் என்று என் நினைவில் கிடக்கிறது.
தாயக விடுதலையில் தளராத நேசம் கொண்டு தன் வாழ் நாளெல்லாம் பணியாற்றிய உணர்வாளர். அதற்காக ஆங்கில மொழி ஏடுகளுக்கும், பிரித்தானிய தலைவர்களுக்கும் அவர் எழுதிய கடிதங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
பல தடவைகள் இங்கிலாந்து சென்று அவருடன் பேசியுள்ளேன். அத்தருணம் அவர் கூறிய விபரங்கள் என்னை மெய் சிலிர்க்க வைத்தன. இந்த விடயத்தில் இங்கிலாந்தில் பலர் ஊடகங்களில் பெரும் புகழ் பெற்றிருந்தார்கள். ஆனால் அவர்களுடன் சிவானந்தம் அண்ணா செய்த வேலைகளை ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரிந்தது.
சிவானந்தம் அண்ணா மிகவும் நுட்பமான கலைஞன் அவரை சாதாரண அறிவுள்ளோரால் விளங்க முடியாது. அதனால்தான் அவரை பலரால் அடையாளம் காண முடியவில்லை. அவர் மூளை கற்பூரம் போல பற்றிவிடும் அபார சக்தி வாய்ந்தது.
எனது இளம்புயல் திரைப்படத்தில் பாடல் வெளியீட்டு விழா இங்கிலாந்தில் நடந்தபோது முக்கிய விருந்தினராக பங்கேற்று பேசினார். அப்போதும் தியாகி திலீபன் பற்றி பேசியே திரைப்படத்திற்கு வந்தார். காரணம் அவருடைய விடுதலை நேசம் அப்படிப்பட்டது.
அன்று வல்வை ஒன்றியம் இங்கிலாந்தில் செயற்பட்டபோது சிவானந்தமண்ணாவுக்கு பெரியதோர் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டோம். ஆனால் நாட்டில் நடைபெற்ற போர் சூழல் அதற்கு இடம் தரவில்லை. இப்பொழுது அதை செய்யவில்லையே என்பதை நினைத்து கவலைப்படுகிறேன். வட்டம் சிறி அவர்களுக்கு இதைப்பற்றி விபரமாக சொல்லியிருந்தேன். அவரும் செய்ய வேண்டுமென கூறியிருந்தார்.
இவ்வளவையும் கூறிவிட்டு, இவர் யார் என்பதை மீண்டும் ஆழமாக சிந்தித்துப் பார்க்கிறேன்,
இவர் ஊர் மீது தாளாத நேசம் கொண்டவர். எத்தனை பிறவிகள் இருந்தாலும் வல்வையை தவிர்த்து இன்னொரு ஊரில் பிறக்க சம்மதிக்காத வல்வை நேசர். தலைவர் பிரபாகரனில் மிகப்பெரிய மரியாதை கொண்டவர். தாயக விடுதலையில் மிகப்பெரிய ஆர்வம் கொண்டவர்.
எல்லாவற்றையும் கடந்து மிகப்பெரிய கலைஞன். இங்கிலாந்தில் வல்வை ஒன்றிய விழாவில் அவர் வைத்த அன்னபூரணி கப்பல் இன்றும் மறக்க முடியாத புகைப்பட சான்று.
இவருடைய சகோதரி சந்திரகாந்தியின் கணவர் காலம் சென்ற அப்பாச்சாமியுடன் மிகவும் அன்பாக பழகுவார். அப்பாச்சாமி கொக்கு கட்டுவதில் மிகப்பெரிய கலைஞன். இரண்டு கலைஞர்களும் ஒன்றாக வாழ்ந்த காலத்து இன்பத்தை நேரில் பார்த்துள்ளேன். இவருடைய தாயாருக்கு மானாங்கானையில் ஒரு காணி இருந்தது. அங்கு கொய்யா மரங்கள் நின்றன. போனால் தருவார், தங்கமான குணமுடைய வள்ளியம்மைப் பிள்ளையை நாம் எல்லோரும் அன்பாக நேசித்தோம்.
மேலும் நூறு ஆண்டுகள் போனாலும் அன்று நடந்த திருவிழாவும், தேவகன்னிகை போட்டிக்கோவும் அழியாத கோலமாகவே இருக்கும்.
அதற்குப் பின்புதான் வல்வையில் எங்கு திருமணம் நடந்தாலும் ஒரு தேவகன்னி உருவத்தை சுவரில் செய்வது வழமையானது. இப்போது கனடா மொன்றியலில் வாழும் அ. ஈஸ்வரலிங்கம் அத்தான் அதை தொடர்ந்து செய்து வந்துள்ளார்.
இன்று போட்டிக்கோ கட்டும் கலை பெரிதாக வளர்ந்துள்ளதென்றால் அதற்கு அடித்தளமிட்டவர் சிவானந்தமண்ணாதான். ஒரு தஞ்சை பெருங்கோயில் அதற்கு பின்னர் ஆலய அமைப்பின் பிரமாண்டத்திற்கு வழிகாட்டியது போல வல்வையின் பிரமாண்ட காலத்தில் வலம் வந்த கலைஞர் இவர்.
மகாபாரதம் லைற் படலம்.. ! பாகாசுர சாதனை இன்றுவரை முறியடிக்கப்படாத சாதனை.
1965 இந்திரவிழா இன்றுவரை முறியடிக்கப்படாத சாதனை..!
எப்படி சோழர் காலத்தில் செல்வம் புரண்ட காரணத்தால் எதையும் பெரிதாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகி கம்பராமாயணம், பெரியபுராணம் போன்ற காவியங்களும், தஞ்சை பெரும் கோயில் போன்ற பிரமாண்டங்களும், கடற் போர்களும் ஆயிரம் ஆண்டு கால பொற்காலத்தை சோழர்கள் உருவாக்க காரணமானதோ அது போல வல்வையிலும் வாணிபம் சிறந்த காலத்தில் உருவான பிரமாண்டங்கள் பல.
வல்வையில் திரு. வே. பிரபாகரனின் பூட்டனான திருமேனியர் வெங்கடாசலம் என்பவர் ஏழு மாடங்களை கொண்ட திருக்கோபுரம் அமைத்து வல்வை அருள்மிகு வாலாம்பிகை சமேத வைத்தீஸவர பெருமானின் கோயிலை அமைத்தது, தஞ்சை பெரும் கோயில் போன்ற ஒரு சிந்தனைதான். ஏனென்றால் அந்த ஆலயம்தான் வல்வையில் ஆறுகால பூசையை ஆரம்பித்து வைத்தது. அதேபோல வல்வை திருமேனியர் குழந்தைவேற்பிள்ளை தம்பணத்தில் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள செக்கடி கதிரேசன் கோயிலையே கட்டிக் கொடுத்தார்.
நூறு ஆண்டுகளுக்கு முன் தாழ்ந்து போன பிறீ அற்லான்ரிக் கிங் என்ற கப்பலை தி. வேங்கடாசலம் மீட்டு சாதனை படைத்தது என்று வல்வை பெற்ற வெற்றிகள் பல.
1905ம் ஆண்டு பிரித்தானிய மகாதேசாதிபதியாக இருந்த ஹென்றி பிளாக் சித்திரா பௌர்ணமியன்று முப்பதிற்கும் மேற்பட்ட பாய்க்கப்பல்கள் அலங்கார கொடிகளுடன் வல்வை கடலில் நின்றதாகக் கூறுகிறார்.
இது ஒரு தேசத்தை ஆண்டது போன்ற காட்சியல்லவா..?
இவைகள் எல்லாம் வல்வை ஒற்றுமையாகவும் ஊர் என்ற உணர்வோடும் இருந்ததால் உண்டான வெற்றிகள் அல்லாது வேறென்ன..?
சாதனையாளராக வாழ வேண்டும் என்றே ஒவ்வொரு வல்வை குடிமகனும் நினைத்தான். ஊறணி வைத்தியசாலை, சிதம்பராக்கல்லூரி, சிவகுரு வித்தியாசாலை, சிற்றம்பலம் பார்வதிப்பிள்ளை பிரசவ விடுதி, பிரிட்டனில் எட்வேட் தங்கவடிவேல் வேண்டிய கப்பல், நவரத்தினசாமி, நீச்சல் வீரன் ஆனந்தன் போன்றோரின் சாதனைகள் என்று அடுக்கியபடி செல்ல முடியும். அத்தகைய சாதனைக்காலத்தில் தோன்றிய அழகிய தாமரை மலர்களில் ஒரு மலரே நமது ஐ.அ.சிவானந்தமண்ணா.
இன்று அவர் நம்மிடையே இல்லை..
ஆனால் அவருடைய நினைவுகள் இல்லாமல் வல்வை இல்லை..
கி.செ.துரை ( டென்மார்க் ) 01.02.2019