ஏமனில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் படை தளபதி ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார்.
இது குறித்து அல் அரேபியா செய்தி ஊடகம், ”ஏமனில் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஹஜ்ஜா மாகாணத்தில் சவுதி கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தளபதி அப்துல்லா ஜஹாப் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலை சர்வதேச சட்ட விதிகளுக்கு உட்பட்டே சவுதி நடத்தியுள்ளது” என்று செய்தி வெலியிட்டுள்ளது.
ஏமன் அரசு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏமனில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஏமனில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் படைத் தளபதி இம்ராகிம் அல் ஷமி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏமன் உள்நாட்டுப் போர்
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.