ஒரு நடிகன் என்னென்ன வேடங்களில் நடிக்கலாம்? திருடன், போலீஸ், நல்லவன், கெட்டவன், வில்லன், தந்தை..சமயங்களில் கதைப்படி இறந்துபோய் பிணமாகக்கூட நடிக்க நேரும். மாலைகள் போர்த்தப்பட்ட உடலை அசைக்காமல், மூச்சைக் கட்டுப்படுத்திக்கொண்டு சற்று நேரம் இருக்க வேண்டியிருக்கும். ஆனால் நடமாடும் பிணமாக, நின்றபடி உடலை விறைத்துக்கொண்டு , உடலில் உயிர் இருப்பதையே மறைத்து நடிக்க நாகேஷ் ஒருவரால்தான் முடியும். கமலுடன் இணைந்து தொடங்கிய தனது இரண்டாவது இன்னிங்ஸில் நாகேஷ் ஜொலித்த ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தின் அந்த நகைச்சுவைக் காட்சியை ரசிக்காதவர்களும், அவரது உடல்மொழியைப் பார்த்து வியக்காதவர்களும் இருக்கவே முடியாது. தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் அல்ல, தமிழகத்தின் இணையில்லாத கலைஞர்களில் ஒருவர் அவர்.
`திருவிளையாடல்’ தருமி, `தில்லானா மோகனாம்பாள்’ வைத்தி, `காதலிக்க நேரமில்லை’ செல்லப்பா என்று அவர் நடித்த பாத்திரங்களை யாராலும் நகலெடுக்க முடியாது. நடனம், பாய்ச்சலான உடல்மொழி என்று பிற நகைச்சுவை நடிகர்கள் (சந்திரபாபு நீங்கலாக!) நினைத்துக்கூடப் பார்க்க முடியாத பிரதேசங்களில் கொடிநாட்டியவர். முகமெங்கும் அம்மைத் தழும்பு, ஒடிசலான உருவம், சற்று முறைத்த மாதிரியான பார்வை என்ற தோற்றம் கொண்ட நாகேஷை திரை நடிகராக இல்லாமல் சாதாரண சக மனிதராகக் கற்பனை செய்துபாருங்கள். சுள்ளென்று எரிந்துவிழுவாரோ என்று எண்ணி சற்றுத் தொலைவில் இருந்துதான் பேசியிருப்போம். ஆர்ப்பாட்டமான உடல் அசைவுகளும் உயர் டெசிபல் குரலுமாக நம் கவலைகளைக் காணாமல் போகச் செய்த அந்த அற்புதமான நகைச்சுவை நடிகர் நம் மனதுக்கு நெருக்கமானவராக ஆனது எப்படி? அதுதான் அவரது உயர்ரக நகைச்சுவை உணர்வு. தனது வாழ்வின் அனுபவத்திலிருந்து எடுத்து அவர் கையாண்டது அது.
உலகின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர்கள் போலவே அவரது வாழ்க்கையும் துயரங்களும் ஏமாற்றங்களும் நிறைந்ததுதான். தனது வாழ்வின் சோகங்களையும் நகைச்சுவையாக மாற்றத் தெரிந்த கலைஞர் அவர். அதனால் தான் `‘எல்லாம் இருக்கு.. ஆனா இந்த கதை மட்டும் கெடச்சிட்டா..படம் எடுத்துடலாம்” என்று கலைத்தாகத்துடன் அலையும் ஓஹோ புரொடக்ஷன் செல்லப்பாவைப் பார்த்தவுடன் அடக்க முடியாமல் சிரித்துவிடும் நாம், “மாது வந்திருக்கேன்” என்றபடி ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் நிற்கும்போது நெகிழ்ந்து விடுகிறோம்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி தொடங்கி அனைத்து நடிகர்களுடனும் நடித்த நாகேஷ், படத்தின் பிரேமுக்குள் வந்ததும் பார்வையாளர்களின் கவனத்தைத் தன்பக்கம் ஈர்க்கத் தெரிந்த கலைஞர். தனது முதல் நாடகத்தில் கிடைத்த `வயிற்று வலிக்காரன்’ என்ற சிறு வேடத்தின் மூலம் தனது அசாத்தியமான நம்பிக்கையுடன் கூடிய நடிப்பால் பார்வையாளர்களைக் கவர்ந்தவர் என்பதால் இதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
பெரும்பாலும் நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்களை விட அதிக புத்திசாலிகளாக, கஷ்டமான சூழல்களில் அவர்களுக்கு அறிவுரை சொல்பவர்களாகச் சித்திரிக்கப்படுவது வழக்கம். சில விதிவிலக்குகள் இருக்கலாம். அதுபோன்ற புத்திசாலித்தனமான நண்பன் பாத்திரத்தில் நாகேஷ் அளவுக்கு யாரும் ஜொலிக்கவில்லை. ஏனெனில் அவருக்குக் கதாநாயகனைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் அனைத்தும் அத்துபடியாக இருக்கும் என்பதை நம்பும்படியான தோற்றம் இயல்பாகவே அமைந்துவிட்டது. கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை மற்றும் டையுடன் சேல்ஸ்மேன் பாத்திரம் என்றாலும் சரி குடுமி வைத்த கிராமத்தான் பாத்திரம் என்றாலும் சரி அதை புத்திசாலித்தனம் கொண்ட துடுக்குத்தனத்துடன் அவரால் மிளிரச்செய்ய முடிந்தது.
‘சோப்பு சீப்பு கண்ணாடி’ படத்தில் பணக்கார வீட்டுப் பையனான நாகேஷ், கல்யாணம் செய்யுமாறு வற்புறுத்தும் தன் குடும்பத்தினரை எதிர்த்து வீட்டை விட்டு ஓடிவிடுவார். ரயிலில் செல்லும்போது தன்னுடன் பயணிக்கும் கிராமத்து மனிதர்களைக் கடுமையாகக் கிண்டல் செய்வார்.
டிக்கெட் எடுக்காமல் பயணிப்பதாகவும், ஆங்கிலம் தெரியாதவர்கள் என்றும் அவர்களைச் சீண்டுவார். டிக்கெட் பரிசோதகர் வரும்போது கையைக் கட்டிக்கொண்டு பேசாமல் நிற்பார். காரணம் அவரும் டிக்கெட் எடுத்திருக்க மாட்டார். இதைக் கேட்டவுடன் சக பயணிகள் கொதித்தெழுவார்கள். “வித்தவுட் லே வந்துட்டுத் தான் எங்களையெல்லாம் கிண்டல் பண்ணினாயா” என்று அவர்மீது பாய்வார்கள்.
டிடிஆர் நாகேஷை அழைத்துச் செல்லும்போது ஒருவர் கேட்பார், “என்னவோ இங்க்லீசுலெ பேசுனியே இப்பொ பேசு”. தனது திமிரில் இருந்து சற்றும் தளராத நாகேஷ் திரும்பிப் பார்த்து சொல்வார், “அயாம் ஸாரி!”
`அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் குரூரமான வில்லன் பாத்திரத்திலும் நகைச்சுவை செய்வார். திமிராகப் பேசும் நாகேஷை இன்ன பிற வில்லர்களுடன் சேர்த்து போலீஸ் கமல் உள்ளாடையுடன் அழைத்து வருவார்.
தன்னை அந்தக் கோலத்தில் புகைப்படம் எடுக்க முயலும் புகைப்படக்காரரை நாகேஷ் மிரட்டுவார். “போட்டோ எடுப்பே?” எனும்போது கமல் லத்தியால் ஒன்று வைப்பார். அதுவரை கொடூரமான வில்லனாக மிரட்டிக் கொண்டிருந்த நாகேஷ், வலி தாங்காமல் உடலை எக்கி, “வே..” என்பார்.
இந்தியாவின் ஜெர்ரி லூயி என்று புகழ்பெறும் வகையில், இணையற்ற நகைச்சுவைக் கலைஞராக மிளிர்ந்த நாகேஷ், எந்தக் காட்சியாக இருந்தாலும் அதில் தனது நகைச்சுவை முத்திரையை அழுத்தமாகப் பதித்ததில் ஆச்சரியமென்ன?