ஏன் இப்படி வாசிக்கிறே. உனக்குத்தான் இந்த டியூன் தெரியுமே’ என்று ரஹ்மானிடம் இளையராஜா செல்லக்கோபம் காட்ட, மொத்த அரங்கமும் சிரித்து அதிர்ந்தது.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில், இளையராஜா 75 எனும் பிரமாண்டமான நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இளையராஜாவின் இசை நிகழ்ச்சி மற்றும் பாராட்டு விழாவும் நடைபெறுகிறது. நேற்றும் இன்றும் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் நேற்று, ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டார்.
அப்போது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகை கஸ்தூரி, ‘ஏ.ஆர்.ரஹ்மான் கீபோர்டு வாசிக்க, இசைஞானி இளையராஜா ஒரு பாடலைப் பாடுவார்’ என்று அறிவித்தார்.
உடனே இளையராஜா, மெளனராகம் படத்தில் இசையமைத்த ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ பாடலைப் பாடினார். உடனே ஏ.ஆர்.ரஹ்மான், அந்தப் பாடலுக்கான இசையை கீபோர்டில் வாசித்தார்.
மைதானத்தில் இருந்த மொத்த ரசிகர்களும் கரவொலி எழுப்பி, உற்சாகமானார்கள். அப்போது இளையராஜா பாடல், ஏ.ஆர்.ரஹ்மான் சற்றே தவறாக வாசித்துவிட, உடனே இளையராஜா, ‘ஏன் இப்படி வாசிக்கிறே? உனக்குத்தான் இந்த டியூன் தெரியுமே’ என்று செல்லமாக அட்வைஸ் செய்ய, கீபோர்டை விட்டு, தெறித்து நகர்ந்து சிரித்து மகிழ்ந்தார் ரஹ்மான்.
இதைப் பார்த்து, ரசிகர்கள் இன்னும் கைத்தட்டினார்கள். உற்சாகக் குரல் கொடுத்தார்கள்.