ஆந்திராவில் தனது கணவரின் சடலத்தை பார்த்து மனைவி சிரித்ததால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் விசாரணை மேற்கொண்டதில், கணவரை கூலிப்படையை ஏவி அவர் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், அர்த்தவீடு மண்டலம், நாகலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகன்மோகன் ரெட்டி (40). இவரது மனைவி ரஜினி (35).
இந்நிலையில், அப்பகுதியில் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் வெங்கடராமா ரெட்டியுடன் ரஜினி நெருக்கமாக பழகி வந்ததாக தெரிகிறது. இதனால், தங்களுக்கு இடையூறாக உள்ள ஜகன்மோகன் ரெட்டியை கொலை செய்ய அவர்கள் இருவரும் திட்டமிட்டனர்.
இதற்காக, கூலிப்படையினருக்கு அவர்கள் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளனர். பின்னர், வெங்கடராமா ரெட்டி, கடந்த 2 நாட்களுக்கு முன் ஜகன் மோகன் ரெட்டியை தனது காரில் தனியாக அழைத்துச் சென்றார்.
பின்னர், ஆத்மகூரு வனப்பகுதிக்கு கொண்டு சென்று, அங்கு மயக்க ஊசி போட்டுள்ளார். இதில் மயக்கமடைந்த ஜகன்மோகன் ரெட்டியை கூலிப்படையினரின் உதவியுடன் டிராக்டர், ஜேசிபி இயந்திரத்தை ஏற்றி கொன்றதாக கூறப்படுகிறது.
பின்னர், அவரது சடலத்தை வனப்பகுதியில் வீசி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றனர்.
இதனிடையே, தனது கணவரை காணவில்லை என காவல் நிலையத்தில் ரஜினி புகார் செய்துள்ளார். இதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
பின்னர், ஆடு, மாடு மேய்ப்பவர்கள், ஜகன்மோகன் ரெட்டியின் சடலத்தை கண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீஸார் சடலத்தை அடையாளம் காண ரஜினியை வரவழைத்தனர். அங்கு சென்று சடலத்தை கண்ட ரஜினி, அதிர்ச்சி அடையாமல் சிரித்துள்ளார். இதனால் போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது.
பின்னர், கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோக்களையும், ரஜினியின் செல்போன் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். இதில், ரஜினியும், டாக்டர் வெங்கடராமா ரெட்டியும் இணைந்து ஜகன்மோகன் ரெட்டியை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ரஜினி மற்றும் டாக்டர் வெங்கடராமா ரெட்டி மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.