சிறீலங்கா சுதந்திரதினம் ஒரு கறுப்பு நாளே டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்

Denmark
04.02.2019

சிறிலங்காவின் சுதந்திர நாள் ஈழத்தமிழரின் கருப்பு நாள்
இன்று சிறிலங்காவின் 71ஆவது (04.02.1948) சுதந்திர தினம். ஆனால் ஈழத்தமிழர் வாழ்வில் கருப்பு எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய நாள். சிறிலங்காவிற்கு சுதந்திரம் கிடைத்து 71 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தமிழர் வாழ்வில் அந் நாள் கரி நாளாகவே இன்றும் தொடர்ந்த வண்ணமுள்ளது.

தமிழருடைய தாயகத்தினை தங்களது காலனித்துவ ஆதிக்கத்திற்கு கொண்டு வந்த போத்துக்கேயர், ஒல்லாந்தர் இருவரும் எங்களது பண்பாட்டு விழுமியங்கள் மீது போர் தொடுத்ததோடு தங்களது பொருளாதார நலன்களையும் காத்துக்கொண்டனர். ஆனால் இறுதியாக வந்த ஆங்கிலேயர் எமது ஆழமான அரசியல் கட்டமைப்பினை
சிதைத்து தங்களது பொருளாதார தேவைகளுக்காகவும், நிர்வாக வசதியை கருத்தில் கொண்டும் சிங்களம், தமிழ் என்ற இரு வேறான தேசிய இனக்குழுமங்களை ஒன்றாக்கி ஆட்சி நிர்வாகம் செய்தனர். அதிலிருந்து ஆரம்பித்த முரண்பாடு இன்றுவரை தீர்க்கப்படாமல் தொடர்கின்றது.

சுதந்திரத்தின் பின்னான இலங்கை தீவின் அரசியல் ஆதிக்கத்தினை கைப்பற்றிய சிங்களத தலைவர்கள், தங்களுக்கு வாய்ப்பான யாப்பு முறைமைகளை உருவாக்கி இலங்கைத் தீவை ஆண்டதனால் இனமுறுகல்கள் வீரியமடைந்தன. 1958, 1977 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளில் நடந்த தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரங்கள்இவற்றில் குறிப்பிடத்தக்கவை. இதன் விளைவாக 1976 இல் தமிழ் தலைவர்கள் சனநாயக வழியில் வட்டுக்கோட்டையில் பிரகடனப்படுத்திய தமிழீழ அறைகூவல் பின்னர் ஆயுத போராட்டமாக பரிணமித்தது. போரியல் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு கடைசிவரை நடைபெற்ற தமிழர் அறப்போராட்டத்தினை வல்லமைதிப்படுத்திய அனைத்துலகம் இன்று வரை ஈழ தமிழர்களுக்கான நீதியை பெற்று கொடுக்க தவறி உள்ளது.

இன்றும் தமிழர் தாயகத்தில் நில விடுவிப்புக்கான போராட்டம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிந்து தரும்படி நடாத்தப்படும் போராட்டம், தென்னிலங்கை சிறைக்கூடங்களில் விசாரணைகளின்றி சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதை அனுபவிக்கும் அரசியற்கைதிகளின் போராட்டம் என பல்வேறு எதிர்ப்பு போராட்டங்களை தாயக மக்கள் முன்னெடுத்து வரும் நிலையில், தமிழர் காணி அபகரிப்பும் அதன் தொடர்ச்சியான சிங்களமயமாக்கல் மூலம் தமிழர் நிலப்பரப்பினை துண்டாடுதல், தமிழர் பிரதேசங்களை சிங்கள இராணுவ முற்றுகைக்குள் வைத்திருத்தல், தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சியினை தடுத்தல், கலாச்சார சீர்கேடு, போதைபொருள் பாவனையினை ஊக்குவித்தல், என பல்வேறு முறைகளில் சிங்கள அரசு தமிழினம் மீதான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பினை தொடர்ந்து வருகின்றது. எமது மக்கள் இவ்வாறான சூழலில் வாழ்ந்துவருகின்றார்கள் என்பதனை வெளியுலகிற்கு எடுத்துச்சொல்ல வேண்டியது எமது கட்டாய கடமையாகும்.

போர் முடிவடைந்து 10 வருடங்களை நெருங்கிவிட்ட நிலையிலும், தமிழ் மக்கள் தமது கருத்துக்களை கூறமுடியாதளவிற்கு சிங்கள அரசின் சட்டங்கள் தடுக்கின்றன. இன்றும் சிறிலங்கா அரசு ஒற்றை ஆட்சி முறையினை வலுப்படுத்தும் யாப்பிணை தமிழர் மீது திணிக்க முயன்று கொண்டிருக்கின்றது.

சிறிலங்காவினால், சர்வதேசத்திற்கு உறுதி கூறிய பயங்கரவாத தடைச்சட்டம் இன்னமும் நீக்கப்படவில்லை. ஆகவே இவ்வாறான செயல் சிங்கள தேசம் தமிழினத்தினை அழிப்பதில் கங்கணம்கட்டி நிற்பதையே கோடிட்டு காட்டுகின்றது, என்பதனை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தி, இன அழிப்பிற்கு எதிரான சர்வதேச விசாரணையொன்றினை
நடாத்துவதற்கான வேண்டுகோளை, புலம் பெயர்ந்து வாழும் தமிழ்; மக்களாகிய நாம் ஒருமித்த குரலில் கொடுக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.

சிங்கள பேரினவாத அரசுக்கு அழுத்தங்களை கொடுத்து, ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமையினை அங்கீகரிக்க, அனைத்துலக நாடுகளில் வாழ்ந்து வரும் எம் தமிழ் சொந்தங்கள் ஓரணியில் திரண்டு செயலாக்கம் பெற, இவ்வேளையில் டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம் உரிமையுடன் அழைக்கின்றது.

நன்றி
டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம்
டென்மார்க்

Related posts