அரசியல் தீர்வுத் திட்டத்தை கூட்டமைப்பே குழப்பியது மஹிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு. தமது ஆட்சியின் பொழுது தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சி தோல்வி கண்டமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான காரணம் என்று முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ நேற்று குற்றம்சாட்டினார்.
ரணிலிடம் இருந்து தீர்வை பெறவே தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்கள் விரும்பினார். அதனால் பேச்சை இழுத்தடித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ் பத்திரிகைகள் இலத்திரனியல் ஊடகங்கள் ஆகியவற்றின் ஆசிரியர்கள் மற்றும் செய்தி பொறுப்பாளர்களை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கொழும்பு விஜயராம மாவத்தையில் உள்ள தனது இல்லத்தில் நேற்று காலை சந்தித்து சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடினார் இதன்போது ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதில்களை வழங்கினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று செனட் சபையை உருவாக்குவதற்கு யோசனை முன்வைத்திருந்தோம், அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கி இருந்தால் அரசியல் தீர்வை எட்டியிருக்கலாம்.
ஆனால் தீர்வை நோக்கி பயணிப்பதற்கு அக்கறை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருக்கவில்லை. பேச்சு மேசையில் வைத்து காலையில் ஒரு கதையும் மாலையில் ஒரு கதையும் கூறிவந்தனர்.
ரணில் ஆட்சிக்கு வந்தால்தான் தாம் கூறுவதை அவர் தருவார் என்பதே அவர்கள் எதிர்பார்ப்பாக இருந்தது. என்னுடன் இருந்த பகை காரணமாக ரணிலிடம் இருந்து தீர்வை பெறவே கூட்டமைப்பினர் விரும்பினார்.
ஆனால் இன்று என்ன நடக்கிறது? பாம்பையும் தடியையும் காட்டிக்கொண்டு தான் விரதம் என ஏமாற்றி வருகிறார் ரணில். இன்று வடக்கே இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. விவசாயிகள் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்த முடியாது. ஏன் குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் கூட இல்லை. புதிதாக தொழிற்சாலைகள் உருவாக்கப்படவில்லை. எனவே வடக்கு மக்களுக்கு அரசு என்ன செய்கிறது?
இன்னும் மாகாணசபை தேர்தல் நடத்தப்படவில்லை. அதனை உடன் நடத்துமாறு வடக்கு மாகாணசபை வலியுறுத்தியதா அதுதான் இல்லை. மாகாணசபை தேர்தல் தான் முதலில் நடத்தப்பட வேண்டும.; இலங்கை சிறிய நாடு இங்கு தனி ராஜ்ஜியம் குறித்து கதைப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை.
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் முதல்வர் காலை பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை உருவாகும். மேலும் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்னர் மேற்கொண்ட இந்திய பயணத்துக்கும் ஆட்சி கவிழ்ப்புக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கேள்விக்கு அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.
எதிர்காலத்தில் தமது ஆட்சியின் போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்காத பட்சத்தில் தமிழ் மக்களுடன் நேரடியாக கலந்துரையாடல்களை நடத்தி அவர்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுக்கப் போகிறேன் என்றும் கூறினார.;
மகிந்த ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது இலங்கை தமிழர்களுக்கு 13 ஆவது திருத்தத்தையும் தாண்டிய அதிகாரப்பகிர்வை வழங்குவார் என தெரிவித்திருந்தார்.
பதின்மூன்றாவது திருத்தத்தை தாண்டிய அதிகாரப்பகிர்வு என்றால் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழ் மக்களுக்கான அடிப்படை வசதிகளும் பொருளாதாரத்தை பயன் படுத்தும் போதும் அவர்களுக்கான அரசியல் தீர்வுகள் தன்னிச்சையாகவே கிடைக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார் இதன்படி மத்திய அதிகாரங்கள் உள்ளூராட்சி சபைகளுக்கான அதிகாரங்களை அடிப்படையாகக் கொண்டு 13 எண்ணத்தை தான் முன் வைத்தேன் என்றும் அவர் கூறினார்.
மேலும் அவர் கூறும்போது போரில் வெற்றி பெற்றமைக்கு வழங்கப்படும் பதவிதான் பீல்ட் மார்ஷல் பதவி அதைப் பெறுவோர் அரசியலில் ஈடுபடக் கூடாது என்றும் கூறினார். அந்தப்பதவி படைத்துறையின் அதி உயர் பதவி அதை வைத்து அரசியலில் ஈடுபட முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
தனது மகனுக்கு மூன்று மத முறைப்படி மணமுடித்து வைத்த பின் இந்த சந்திப்பை நடத்தினார். மகிந்த மகனின் திருமண பட ஆல்பம் கீழே..
அலைகள் 06.02.2019