ரதிமோகனின் முகநூல் பதிவிலிருந்து..
வெள்ளியில் ஒரு திருக்குறள்:
“குடம்பை தனித்துஒழியப் புள்பறந்துஅற்றே உடம்போடு உயிர்இடை நட்பு”
ஆம் வள்ளுவப்பெருந்தகை கூறுகிறார்.
உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு கூட்டிற்கும் பறவைக்கும் உள்ள தொடர்பு போன்றது. கூட்டைத்தனியே விட்டுவிட்டு பறவை எந்த நேரத்திலும் பறந்து போய்விடும்.
இந்த உடலில் உயிர் இருக்கும் வரைதான் அதற்கு மதிப்பு. அது நீங்கிவிட்டால் அதை பிணம் என சொல்கிறோம்.. இதுநாள் வரை இருந்த உடம்புக்கு எத்தனை அழகுத்தைலங்கள் பூசி பராமரித்திருப்போம்.. அழகு அழகு என சொல்லியே பெருமை கொண்டிருப்போம்.. செருக்கு , ஆணவம், அகங்காரம் கொண்டு வாழ்ந்திருப்போம்.அத்தனையும் ஒரு நொடியில் காற்றோடு கலந்துவிடும் என்பதை புரியாதவர்களாய்….
உண்ணாமல் உறங்காமல் சிறுகச்சிறுக சேர்த்து வைத்த சொத்துக்கள் கூடத்தான் வந்திடுமா? வாழும் வரை சேர்ந்த கூட்டம் கூடத்தான் வந்திடுமா?
இதுநாள்வரை சேர்த்து வைத்த பாவங்களும் புண்ணியங்களும் மட்டுமே எம்மோடு கூட வரும் என்பதை மறவாது இருப்போம்.
உயிர் போனபின் இத்தனைநாள் கட்டி காத்த இந்த உடலை தொட அருவருத்து எட்ட நின்று ஒப்பாரி வைக்கும் சொந்தங்களும்..எத்தனை மணிக்காம் பிணம்(body) எடுக்கிறார்கள்??? என கேட்டபடி வருபவர்கள் கூட இதுநாள்வரை அழைத்த நம் அழகான பெயரை உச்சரிப்பதில்லையே.
இவற்றை புரிந்து ,தெளிந்து கொள்ளாமல் மமதையோடுதானே இருக்கிறோம்..
இதற்குள் அட்டகாசம் ஆர்ப்பாட்டம்??
பெரிய தலைக்கனம்??
தற்பெருமை பிடித்தே அன்பில் மட்டும் வறுமையோடு வாழ்கிறோம்.
சூதும்வாதும் வஞ்சகமும் மனமெல்லாம் நிறைத்தபடி உதட்டில் தேனும் உள்ளத்திலே நஞ்சையும் சுமந்தபடி.. இது சரிதானா???
ஒருகணம் கண்களை மூடியபடி சிந்திப்போம்..
இனியாவது..
வார்த்தைகளில் சக்கரையை பூசிக்கொள்வோம்..
வாழ்க்கையில் உண்மையை நாடிச்செல்வோம்..
வானத்திற்கும் பூமிக்கும்..
புதுப்பெயர் புனைவோம்..
வானம் வசப்பட்டால்..
ஆணவம் கொள்ளாதிருப்போம்..
என்ற சிந்தனையோடு இன்றும் என்றும் இனிய மனிதர்களாக வாழ்ந்துதான் பார்ப்போமே…
அன்போடு உங்கள் தோழி சகோதரி,
ரதிமோகன்
ஓயாதகவியலைகள்