ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை முடிவடையும் தறுவாயில் உள்ளது என, ஆறுமுகசாமி ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அப்போலோ மருத்துவமனை சார்பில் சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
அதில், “ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதற்கான சூழ்நிலை, வழங்கப்பட்ட சிகிச்சை, மரணத்திற்கான காரணம் ஆகியவற்றைக் கண்டறிவதற்காக ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சரியானதா, போதுமானதா என்பது தொடர்பாக ஆணையம் விசாரிக்கிறது. ஆனால் தங்கள் தரப்பில் ஆஜராகும் மருத்துவர்களின் விளக்கத்தைப் புரிந்து பதிவு செய்துகொள்ள 21 துறைகளைச் சார்ந்த மருத்துவர்களைக் கொண்ட குழுவை அமைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவையும் ஆணையம் நிராகரித்துவிட்டது.
அரசு மருத்துவர்களை குறுக்கு விசாரணை செய்ய தங்களை அனுமதிக்கவில்லை, தங்கள் மருத்துவர்கள், பணியாளர்களை ஆஜராகும்போது அவர்களின் பணி நேரத்தை கருத்தில் கொள்ளாமல் காக்க வைக்கப்படுகிறார்கள். ஆணையமே விசாரணையை ஒத்திவைக்கிறது” என குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
தங்கள் மருத்துவர்களை விசாரிக்க வேண்டுமென்றால் 21 மருத்துவர்கள் கொண்டு குழுவை அமைக்க உத்தரவிடவும், அதுவரை ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக விசாரிக்க ஆணையத்திற்கு தடை விதிக்கவும் அப்போலோ சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதேபோன்று, அப்பலோ அளித்த சிகிச்சை தொடர்பாக விசாரணை நடத்த தன்னிச்சையாக செயல்படக்கூடிய மருத்துவர்களைக் கொண்ட மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், அதுவரை சிகிச்சை தொடர்பாக விசாரிக்க ஆணையத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது.
இதுதொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சுப்பையா முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
ஆறுமுகசாமி ஆணைய விசாரணை தொடர்வதை தடுக்கவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை முடிவடையும் தருவாயில் உள்ளது.ஜெயலலிதா மரணத்துக்கான காரணம் மட்டுமல்ல, கடைசி நேரத்தில் வழங்கப்பட்ட சிகிச்சை குறித்தும் விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. 22/9/16 முதல் 5/12/16 வரை நடந்த அனைத்து விஷயங்கள் குறித்தும் விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.
இதுவரை ஜெயலலிதா மரணத்துக்கு சந்தேகம் தெரிவித்து 302 புகார்கள் பல்வேறு காவல் நிலையங்களில் அளிக்கப்பட்டுள்ளது. அவை ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 30 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
ஏற்கெனவே ஜோசப் என்பவர் ஆணையம் நியமித்ததை எதிர்த்த வழக்குகளை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளன. 147 ஆணைய சாட்சிகள், 56 மருத்துவர்கள், 22 துணை மருத்துவ துறையினர் சாட்சியளித்துள்ளனர். மருத்துவ வார்த்தைகள் தவறாக குறிப்பிட்டுள்ளதாக கூறுவது தவறு. அவை தட்டச்சு தவறுகள் தான். அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்களிடம் விசாரிக்கும் போது நியாயமான வாய்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வாறு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதில் மனுவுக்கு பதிலளிக்க அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து விசாரணை வரும் 22-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.