அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த சில ஆண்டுகளாகவே சரியில்லாமல் உள்ளதால் அவர் சிங்கப்பூருக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டார். கடந்த ஜூலை மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். இதையடுத்து, இந்தியா திரும்பிய அவர் மீண்டும் கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி மனைவி பிரேமலதாவுடன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.
இதனிடையே, அவர் கட்சிப் பொறுப்புகளை கவனிக்க முடியாத நிலை இருப்பதால், அவரது மனைவி பிரேமலதாவுக்கு தேமுதிக பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. அவரது மூத்த மகன் விஜய் பிரபாகரனும் அவ்வப்போது கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று முக்கியப் பிரச்சினைகளில் கருத்துகளைக் கூறி வருகிறார்.
இந்நிலையில், விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்தபடியே கிறிஸ்துமஸ், புத்தாண்டு, திருமண நாளைக் கொண்டாடும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகின.
இந்நிலையில், விஜயகாந்த் பூரண நலமுடன் இன்று (சனிக்கிழமை) சென்னை திரும்புவார் என தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று மதியம், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மனைவி பிரேமலதா, இளைய மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய விஜயகாந்துக்கு விமான நிலையத்தில் கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தலைவர் நன்றாக இருக்கிறார். மேல் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது” எனத் தெரிவித்தார்.
கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “கூட்டணி குறித்துப் பேச கட்சிக் குழு அமைத்திருக்கிறது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. உரிய காலத்தில் தலைவர் அதிகாரபூர்வமாக அறிவிப்பார். நாங்கள் கூட்டணிக்காக முயற்சி செய்யவில்லை. எல்லா கட்சிகளும் எங்களிடம் கூட்டணிக்காகப் பேசுகின்றன” என்றார் பிரேமலதா.