தலை மன்னாரிலிருந்து தமிழ் நாட்டுக்கான கப்பல் சேவையையும், காங்கேசன்துறையிலிருந்து தமிழ் நாட்டுக்கான கப்பல் சேவையையும் நடாத்த இருக்கின்றோம் என்ற நற்செய்தியை உங்களுக்கு இவ்விடத்தில் கூறிக்கொள்ளுவதுடன் மன்னார் யாழ்ப்பாணம் ஒரு சுற்றுலா மையமாக அமைய இருக்கின்றது எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
யாழ்ப்பாணம் இந்த நாட்டிலே ஒரு முக்கியமான பிரதேசம். யுத்தத்துக்கு பிற்பாடு வடக்கு பகுதியை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது.
தெற்கு பகுதியை நாங்கள் அபிவிருத்தி செய்வதற்காக கப்பல் துறையை அபிவிருத்தி செய்கின்றோம். இத் துறையையும் தொழில் துறையையும் நாங்கள் அபிவிருத்தி செய்வதற்கு பல அர்ப்பணிப்புக்களை செய்து வருகின்றோம்.
இதற்காக நாங்கள் அதிகமான பணங்களை செலவிட்டு வருகின்றோம். இதற்காக பெற்ற கடனை சீர் செய்வதற்கு நாங்கள் நேர்மையான முறையில் செயல்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கின்றது.
நாங்கள் எப்படி தென்பகுதியை அபிவிருத்தி செய்கின்றோமோ அவ்வாறு யாழ்ப்பாணத்தையும் மன்னாரையும் இந்த வட மாகாணம் முழுவதையும் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம்.
பலாலி விமான நிலையத்தை நாங்கள் பாரிய விமான நிலையமாக மாற்றி இந்த நாட்டின் ஒரு முக்கிய விமான நிலையமாக மாற்றுவதற்கு இருக்கின்றோம்.
நாங்கள் தலைமன்னாரிலிருந்து தமிழ் நாட்டுக்கான கப்பல் சேவையையும் இவ்வாறு காங்கேசன் துறையிலிருந்து தமிழ் நாட்டுக்கான கப்பல் சேவைகயையும் நடாத்த இருக்கின்றோம் என்ற நற்செய்தியை உங்களுக்கு இவ்விடத்தில்கூறிக் கொள்ளுகின்றோம் என்றார்.