நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் பாமக இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை நந்தனத்தில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, அதிமுக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் வந்தனர்.
இதையடுத்து, சிறிது நேரத்தில் பாமக தலைவர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் வந்தனர். முதல்வர் சால்வை அணிவித்து அவர்களை வரவேற்றார். பின்னர், அவர்களுடன் அதிமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தி, இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக் கூட்டணி. இன்றைய பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கும் பாமகவுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தப்படி, பாமக 7 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும். மேலும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் பாமகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறவுள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர்களுக்கு பாமக ஆதரவு அளிக்கும். பாமகவுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும்” என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதன்பின் பேசிய ராமதாஸ், “இது மக்கள் நலக்கூட்டணி. புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. அதிமுகவுடன் பாமக கூட்டணி ஏன் அமைத்தது என்ற காரணத்தை பின்னர் அன்புமணி ராமதாஸ் விரிவாகக் கூறுவார்” என தெரிவித்தார்.