யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களாகியும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையோ வழங்கத் தயாரில்லாத அரசாங்கம் தற்போது இனப்படுகொலையை மறப்போம், மன்னிப்போம் எனக் கூறுவது வேடிக்கையானது.
பிரதமரின் இக்கூற்றை தமிழ் மக்கள் ஏற்கத் தயாரில்லை எனவும் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலையை மறப்போம், மன்னிப்போம் என பிரதமர் கூறிய போது அங்கிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மௌனமாக இருந்துவிட்டு இப்போது மக்கள் முன் நாடகமாடுவதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் அமைந்துள்ள தனது வீட்டில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வடக்கிற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கத்தக்கதாகவே இனப்படுகொலையை மறப்போம் மன்னிப்போம் எனக் கூறியுள்ளார். அவ்வாறு பிரதமர் கூறிய போது வேடிக்கை பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்த கூட்டமைப்பினர் இப்போது மக்கள் மத்தியில் வந்து நாடகமாடுகின்றனர்.
ஜெனிவா அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் அடுத்து வரும் தேர்தல்களை இலக்காக வைத்துமே பிரதமர் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றார் என்பதே உண்மையானது. தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டும் இருக்கின்ற நிலையில் அவை தொடர்பில் நீதியான விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டுமென்றே வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் விசாரணைகளை மேற்கொள்ளாது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்காது மறப்போம் மன்னிப்போம் என்று பிரதமர் கூறுவதும் வேடிக்கையானது. அவ்வாறு பிரதமர் தனக்கு தேவையானதை தேவையான நேரத்தில் கூறுகின்ற போது அவருக்குத் துணையாகவும் அவடைய கருத்துக்களையும் செயற்பாடுகளையும் ஒத்து ஊதுபவர்கள் போன்று கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர்.
போர்க்குற்றம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புகூறலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும்.
இதனைச் செய்யாமல் நல்லிணக்கம் என்பது ஏற்பட முடியாது. ஆகவே இனப்படுகொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நீதியை வழங்க வேண்டுமென்பதே எங்களது கோரிக்கையாகும்.
மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சிற்கே இடமில்லை. மன்னிப்பு என்பது வழங்க முடியாது. அவ்வாறு மன்னிப்பு வழங்கினால் இறந்தவர்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையும். வெறுமனே அரசியல்வாதிகளும் மற்றவர்களும் இதனைத் தீர்மானிக்க முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் நீதியைக் கோருகின்ற போது நீதி வழங்கப்படுவது அவசியமானது.ஆகவே குற்றம் புரிந்த முப்படைகளும் அதனை வழிநடத்தியவர்களும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றார்.