தென்கொரியாவில் இன்று நடைபெற்ற விழாவில், மோடிக்கு ‘ சியோல் அமைதிப் பரிசு’ வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபரில் பிரதமர் மோடிக்கு ‘சியோல் அமைதிப் பரிசு’ அறிவிக்கப்பட்டது. ”ஏழை- பணக்காரர் இடையிலான சமூக மற்றும் பொருளாதார வித்தியாசத்தைக் குறைத்ததற்காகவும் உலக அமைதிக்காகப் பங்காற்றியதற்காகவும் இந்தியப் பிரதமர் மோடிக்கு 2018-ம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருது வழங்கப்படுகிறது” என்று கொரியா தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சியோல் அமைதிப் பரிசைப் பெறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பயணமாக நேற்று (வியாழக்கிழமை) தென் கொரிய தலைநகர் சியோல் சென்றார். அங்கு யோன்சி பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடியும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் பங்கேற்றனர். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலையை மோடி திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற விழாவில், மோடிக்கு ‘ சியோல் அமைதிப் பரிசு’ வழங்கப்பட்டது.
இதுகுறித்துப் பேசிய மோடி, ”இந்த விருதை இந்திய மக்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணும் இந்தியக் கலாச்சாரத்துக்கான விருது இது” என்று நெகிழ்ந்தார்.
இதன்மூலம் இந்த விருதைப் பெறும் 14-வது நபராக மோடி திகழ்கிறார்.
1990-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் சியோல் அமைதி விருது, அதே ஆண்டு சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் நினைவாகத் தொடங்கப்பட்டது.
முந்தைய ஆண்டுகளில் ஐ.நா. முன்னாள் செயலர் கோபி அன்னன், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.